மேற்கு வங்கம், கேரளாவில் 9 அல்-கொய்தா பயங்கரவாதிகள் கைது

பாகிஸ்தான் நாட்டை தளமாகக் கொண்டு இயங்கி வரும் அல் கொய்தா பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து இருந்ததாக எழுந்த சந்தேகத்தின் கீழ் கேரளா மற்றும் மேற்குவங்கத்தில் 9 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.

டெல்லி, செப்-19

இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை கூறுகையில், ”இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் அல்கொய்தா தீவிரவாதிகளுடன் இணைந்து சதி நடப்பதாக தகவல் கிடைத்தது. இந்தியாவின் பல்வேறு முக்கிய இடங்களில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும் தெரிய வந்தது. அப்பாவிகளை கொல்வதற்கும், முக்கிய இடங்களை அழிப்பதற்கும் சதி செய்துள்ளனர். மேலும், அப்பாவி மக்களின் மனங்களில் விஷ வித்துக்களை விதைப்பதற்கும் திட்டமிட்டு இருந்தனர். இதுகுறித்து கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது. இதையடுத்து கேரளாவில் இருக்கும் எர்ணாகுளம், மேற்குவங்கத்தில் இருக்கும் முர்ஷிதாபாத் ஆகிய இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.மேற்குவங்கத்தில் இருந்து ஆறு பேரும் கேராளவில் இருந்து மூன்று பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த பரிசோதனையின்போது பெரிய அளவில் டிஜிட்டல் கருவிகள், ஆவணங்கள், ஜிகாதி கடிதங்கள், கூர்மையான ஆயுதங்கள், நாட்டு வெடிகுண்டுகள், உடல் கவசங்கள், வெடிபொருட்கள் தயாரிப்பதற்கான பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையின்படி, இவர்கள் பாகிஸ்தானை தளமாகக் கொண்ட அல்கொய்தா பயங்கரவாதிகளால் சமூக ஊடகங்கள் வாயிலாக தூண்டப்பட்டுளனர். நாட்டின் தலைநகரம் உட்பட பல இடங்களில் தாக்குதல்களை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.கேரளாவில் எர்ணாகுளத்தில் கைது செய்யப்பட்டவர்கள் முர்ஷித் ஹசன், இயாகுப் பிஸ்வாஸ், மொசாரப் ஹோஸ்சன் என்பது தெரிய வந்துள்ளது. இவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *