ஈ.பி.எஸ். – ஓ.பி.எஸ். இருவரும் ராமன் – லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர்…அமைச்சர் உதயகுமார் பேட்டி

முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் ராமர்-லட்சுமணன் போல ஒற்றுமையாக உள்ளனர் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.

சென்னை, செப்-19

பரபரப்பான தமிழக அரசியல் சூழலில், அ.தி.மு.க.வின் அவசர உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்கினர். அ.தி.மு.க.வில் யார் முதல்-அமைச்சர் வேட்பாளர் என்பது தொடர்பாக நிர்வாகிகளிடையே எழுந்த காரசார விவாதங்களையடுத்து, உயர்மட்ட குழு ஆலோசனை கூட்டத்தின் முடிவில் கட்சியின் செயற்குழு கூட்டத்தை வருகிற 28-ந் தேதி கூட்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது.

இந்நிலையில் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அமைச்சர் ஆர் பி உதயகுமார் பணிகள் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார் கூறியதாவது;-

‘தமிழகத்தில் வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க தமிழக முதல்வர் மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக பாதிப்பு பெருமளவு குறைந்து உள்ளது. தற்போது வைரஸ் பாதிப்பு 7 சதவீதம் 5 சதவீதம் என குறைந்து வருகிறது.இதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ளவர்கள் உயிரிழக்கின்றனர். இதனால் இவ்வாறு நோய் உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை செய்ய தனிக்கவனம் செலுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிமுக ஒற்றுமையுடன் தான் இருக்கிறது. ஆரோக்கிய நிலையை உருவாக்கவே ஆலோசனை நடந்தது. ராணுவ கட்டுப்பாட்டுடன் அதிமுக இருக்கிறது. இளைஞர்கள் தாமாக முன்வந்து அதிமுகவில் இணைகின்றனர். அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு கருத்து சொல்ல எந்த தடையும் தலைமை விதிக்கவில்லை அவர்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதிமுக அன்பு என்னும் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. அனைவரும் கருத்துகளை தெரிவிக்கவே அவசரக்கூட்டம்.நாங்கள் மக்களுக்காக செய்த சேவையும் நலத்திட்டங்களும் அம்மாவின் ஆட்சி மீண்டும் வரவேண்டும் என்பதே மக்கள் விரும்புகிறார்கள்.முதல்வர் எடப்பாடியும் துணை முதல்வர் ஓபிஎஸ் அவர்களும் ராம லட்சுமணன் போல் ஒற்றுமையுடன் செயல்படுகின்றனர். அவர்கள் வழியை தொண்டர்கள் அனைவரும் பின் தொடர்ந்து செல்வோம். முதல்வர் வேட்பாளர் குறித்து பேசக்கூடாது என்று எங்களுக்கு 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அமைக்கும் கூட்டணியால் எதிர்க்கட்சிகள் திக்குமுக்காடிபோகும்.’

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *