சட்டவிரோதமாக மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் இறக்குமதி..கேரள அரசு மீது சுங்கத்துறை வழக்குப்பதிவு.!

திருவனந்தபுரம், செப்-19

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சட்ட விரோதமாக தூதரகம் வழியாக மத நூல்கள் கொண்ட பார்சல் மற்றும் 18 ஆயிரம் கிலோ பேரிச்சம்பழத்தை பெற்றுக்கொண்டதாக கேரள அரசு மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகளை பதிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக சுங்கத்துறை வெளியிட்டுள்ள செய்தியில், தூதரக அதிகாரிகள் தங்கள் சொந்த பயன்பாட்டிற்காக இறக்குமதி செய்து வைத்திருந்த அந்தப் பொருட்களை, கேரள அரசாங்கத்தில் அதிகாரம் படைத்த சில நபர்கள் பரிசாக பெற்றுச் சென்றதாகவும், அவற்றை குறிப்பிட்ட இடங்களில் விநியோகம் செய்வதற்காக பெற்றதாகவும் கூறப்பட்டுள்ளது. ‘வெளிநாட்டு அரசாங்கத்திடமிருந்து பொருட்களை பெறுவதற்கு தடை இருப்பதை மாநில அரசு அதிகாரிகள் நன்கு அறிவார்கள். பொது நிர்வாகத்தின் கீழ் உள்ள மாநில நெறிமுறைத் துறை, ஐக்கிய அரபு அமீரக தூதரகத்திற்கு 2017 ஆம் ஆண்டில் 18,000 கிலோ பேரிச்சம்பழத்தையும், 2020 ஆம் ஆண்டில் இஸ்லாமிய மத நூல்கள் கொண்ட 4,000 கிலோ பார்சல்களையும் இறக்குமதி செய்ய வரி விலக்கு அளித்தது’ என்றும் சுங்கத்துறை கூறி உள்ளது.

நேற்று கேரள வெளியுறவு துறை அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ அதிகாரிகள் நடத்தி விசாரணையில், அவர், மதநூல்கள், 18,000 கிலோ பேரிச்சம்பழம் ஐக்கிய அரசு தூதரகம் வழியாக சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததையும், அதனை பெற்றுக்கொண்டதாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். இதன்அடிப்படையில், கேரள அரசு மீது சுங்கத்துறை 2 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஏற்கனவே அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக அமைச்சர் ஜலீல் பதவி விலக கோரி காங்கிரஸ், பா.ஜா உள்பட எதிர்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா முழுவதும் இந்த போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

தற்போது, சுங்கத்துறை அதிகாரிகள் கேரள அரசு மீது வழக்குப்பதிவு செய்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *