காங்கிரஸ் என்ன செய்தாலும் வாயே திறக்காத கொத்தடிமை கட்சியாக இருந்தது திமுக.. எச்.ராஜா பாய்ச்சல்

சிங்கம்புணரி, செப்-17

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,

“நீட் தேர்வு 2012-ம் ஆண்டுதான் இந்தியாவுக்கு வந்தது. அப்போது மத்தியில் ஆட்சியில் இருந்தது திமுக- காங்கிரஸ் கூட்டணிதான். அதேபோல் நீட் தேர்வு முதன் முதலாக 2013-ம் ஆண்டில்தான் நடந்தது. அப்போதும் மத்தியில் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான் இருந்தது.தேர்தல் நெருங்கிவரும் வேளையில், தற்போது 8 மாதங்களில் நீட் தேர்வை ஒழிப்போம் என்று திமுக கூறுகிறது. திமுக போன்று பொய் பேசுகிற தீய சக்தி வேறு எதுவுமே கிடையாது. மத்தியில் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் மீது வழக்கு போடப்பட்டதால், அப்போது காங்கிரஸ் என்ன செய்தாலும் வாயே திறக்காத கொத்தடிமை கட்சியாக இருந்தது திமுக. ஆனால், தற்போது நீட் தேர்வுக்கு எதிராகப் பேசி வருகிறது. திமுகவில் உள்ள எ.வ.வேலுவின் பள்ளியில் நீட் தேர்வுக்கு பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.

நீட் மட்டுமல்ல, ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றையெல்லாம் திமுகவினரே கொண்டு வந்துவிட்டு தற்போது அதற்கு எதிராகப் பேசுகிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராக யாரும் பேசவில்லை. ஆனால் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து குழந்தைகளை பயமுறுத்தி தற்கொலைக்கு தூண்டுகிற குற்றவாளிகள் திமுகவினர்தான். திமுகவை மக்கள் முழுமையாகப் புரிந்து வைத்துள்ளனர். வரும் தேர்தலில் திமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள்” என்று ஹெச். ராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *