”தமிழர்களின் சுயமரியாதை ஆசான்” ”பகுத்தறிவுப் பகலவன்” தந்தை பெரியாரின் 142-வது பிறந்தநாள்.. ஈ.வெ.ராமசாமி வாழ்க்கை வரலாறு..!!

தந்தை பெரியார்தொண்டு செய்து பழுத்தப்பழம்தூய தாடி மார்பில் விழும்மண்டை சுரப்பை உலகம் தொழும்மனக்குகையில் சிறுத்தை எழும்அவர்தாம் பெரியார்”   இது புரட்சிக் கவி பாவேந்தர் பாரதிதாசனின் வரிகள்,

சொந்த மண்ணில் அடிமைப்பட்டு விலங்குகளைப் போல் கிடந்த மனிதர்களை தட்டி எழுப்பி விழிப்படையச் செய்தவர். மூடநம்பிக்கை எனும் இருளில்  மூழ்கி கிடந்த மக்களுக்கு  அறிவு கண்ணை திறக்கச் செய்து ஒளியை காட்டியவர்.   மானமும் அறிவும் மனிதருக்கு அழகு, ஒழுக்கம் என்பது சமுதாயத்தில் ஆண் ,பெண் இருபாலருக்கும் ஒரே தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கற்பித்தவர். சாதிவேற்றுமை, தீண்டாமை ஒழிப்பு, சுயமரியாதை,பெண்ணுரிமை, பெண் கல்வி, கடவுள் மறுப்பு,இடஒதுக்கீடு ஆகியவற்றிற்காக குரல் கொடுத்த  சமூக சீர்திருத்தவாதி,பகுத்தறிவு பகலவன்  அவர்தான் பெரியார். 

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்னும் இயற்பெயர் கொண்ட பெரியார், 1879-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதி வெங்கட்ட நாயக்கர், சின்னதாயம்மை தம்பதியருக்கு மகனாக ஈரோட்டில் பிறந்தார். இவருக்கு கிருஷ்ணசாமி என்ற சகோதரனும், கண்ணம்மா,பாலம்மா ஆகிய சகோதரிகளும் இருந்தனர். செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த  ராமசாமி, பள்ளிப் படிப்பை ஐந்தாம் வகுப்போடு நிறுத்திக்கொண்டார்,  12 வயது முதலே  தந்தையுடன் இணைந்து வணிகத்தை கவனித்து வந்தார்.  ராமசாமியின் 19 வது வயதில்  அவருக்கும் அவர் சிறுவயது முதலே நேசித்த 13 வயது நாகம்மைக்கும்  பெற்றோர்களால் திருமணம் செய்து வைக்கப்பட்டது.  இரண்டு ஆண்டுகளில்  அவர்களுக்கு பெண்குழந்தை பிறந்தது. ஆனால் அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்து போனது. அதன் பின்னர் அவர்களுக்குப் பிள்ளைப் பேறு வாய்க்கவில்லை. பெண்களுக்கு எதிராக நடைபெறும் மூடநம்பிக்கைகளை கண்ட ராமசாமி, குழந்தைத் திருமணத்தை கடுமையாக எதிர்த்தார். குழந்தைப் பருவத்தில் திருமணமாகி, கணவனை இழந்த தமது சகோதரி மகளுக்கு குடும்பத்தின் எதிர்ப்பையும் மீறி அவர், மறுமணம் செய்துவைத்தார். 

இந்த சம்பவத்தால் ராமிசாமிக்கும் அவரது தந்தைக்கும் பிணக்கு  ஏற்பட்டது.  இதனால் மனம் வெறுத்த ராமசாமி 1904ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி காசிக்கு புனித யாத்திரை சென்றார். அங்கிருந்த அன்ன சத்திரங்களில், பிராமணர் அல்லாதோர் உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, இதனால்  பசியால் வாடிய ராமசாமிக்கு, தூக்கி போடபட்ட இலைகளில் இருந்த எச்சில் சோற்றை உண்ணும் நிலை ஏற்பட்டது.  சாதி ஏற்றத் தாழ்வுகளை கண்டு  மனம் வருந்திய ராமசாமி,  இந்த நிகழ்வுக்கு பின்னர்  , கடவுள் மறுப்பாளராக மாறினார்.  இளம் வயது  முதலே காந்தியக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட ராமசாமி 1919-ம் ஆண்டு காங்கிரசில் இணைந்தார். காந்தியின் வழியை ஏற்றுக்கொண்டு, விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டார். மது ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு உள்ளிட்ட  பல போரட்டங்களில் கலந்துக்கொண்டு சிறை சென்றார். தனது மனைவி நாகம்மையையும், சகோதரி பாலாம்பாளையும் அரசியலில் ஈடுபட செய்து கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை நடத்தினர்.1922-ம் ஆண்டு சென்னை மாகாண காங்கிரஸ் கட்சி தலைவராக பெரியார் தேர்தெடுக்கப்பட்டார். 

1924ம் ஆண்டு கேரள மாநிலம் வைக்கத்தில்  சோமநாதர் கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் செல்லவும் பிராமணர் அல்லாதோருக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போரட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் ‘வைக்கம் வீரர்’ என அழைக்கப்பட்டார்.இதனிடையே சமூகத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் மாநாடுகளில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்.

ஆனால் பெரியாரின் கோரிக்கை  ஏற்கப்படவில்லை. இந்நிலையில், சேரன்மகாதேவி என்ற இடத்தில் காங்கிரஸ் மானியத்தில் வ.வே.சுப்ரமணிய ஐயர் என்பவரால் நடத்தப்பட்ட குருகுலப் பள்ளியில் பிராமண மாணவர்களுக்குத் தனியாகவும், பிராமணர் அல்லாத மாணவர்களுக்குத் தனியாகவும் உணவு பறிமாறப்படுவதை பெரியார் எதிர்த்தார்.

தொடர்ந்து பெரியாரின் கோரிக்கைகள் , கருத்துகள் காங்கிரஸில் நிராகரிக்கப்பட்டது. இதனால் காங்கிரசைவிட்டு வெளியேறிய பெரியார், 1925 ம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தை தொடங்கினார். அதே அண்டு “குடியரசு நாளிதழை” தொடங்கிய பெரியார்,  அதன் மூலம் தன்னுடைய கொள்கைகளையும் சிந்தனைகளையும் பரப்பினார். சாதிமறுப்பு திருமணம், விதவை மறுமணம் ஆகியவற்றை  ஆதரித்தும் தேவதாசி  முறை, குலக்கல்வி,வர்ணாசிரமத்தை எதிர்த்தும், மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 

1931 ம் ஆண்டு ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்ட பெரியார், கொழும்பு, சூயஸ் கால்வாய், கெய்ரோ, ஏதென்ஸ், வழியாக சோவியத் யூனியன் சென்றார். 1932 ம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் நாள் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை அடைந்தார். பின்னர் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல், இலங்கை வழியாக இந்தியா திரும்பினார். இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் பெரியார் பொதுவுடமை கொள்கைளால் ஈர்க்கப்பட்டார்.1937-ம் ஆண்டு ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சராக  இருந்த போது, இந்தி, கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனை எதிர்த்து இந்தி எதிர்ப்பு போராட்டம் வெடித்தது.

இதனையடுத்து காங்கிரசுக்கு எதிராக செயல்பட்டு வந்த நீதிகட்சியில் இணைந்த  பெரியார்,1938-ல் நீதிக்கட்சியின் சார்பில் நடைபெற்ற இந்தி மொழி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு சிறைக்குச் சென்றார். சிறையிலிருந்து விடுதலையானதும், நீதிக்கட்சியின் தலைவர் பொறுப்பை ஏற்றார்.  ‘1944-ம் ஆண்டு நீதிகட்சியை ‘திராவிடர் கழகம்’ என்று  பெயர் மாற்றினார். திராவிடர் கழகம் மூடநம்பிக்கை எதிர்ப்பு, சமூக சீர்திருத்தம் , தீண்டாமை எதிர்ப்பு  ஆகியவற்றை முன்னிறுத்தி  முனைப்புடன் செயல்பட்டது.1948 ல் ஈரோடு மாநாட்டில் தனக்குப் பிறகு அண்ணாதான் தலைவர் என தெரிவித்து பெட்டிச் சாவியை அண்ணாவிடம் கொடுக்கிறேன் என்று கூறிய பெரியார், அண்ணாவின் தேர்தல் அரசியல் நோக்கத்தை  அறிந்து தனது முடிவைக் மாற்றிக் கொண்டார்.. 

இதனையடுதது தனது அண்ணன் மகன் சம்பத்தை வாரிசாக நியமிக்க முயற்சித்து, அவரை தத்து எடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார். ஆனால் சம்பத், அண்ணாவிற்கு ஆதரவாக இருப்பதைக் கண்டு அதையும் கைவிட்டார். பின்னர் தனக்கு உதவியாக இருந்து பணிவிடை செய்து வந்த மணியம்மையை 09.07.1948  அன்று பெரியார்  திருமணம் செய்து கொண்டார். பெரியார் தனது 70 வது வயதில் தன்னைவிட 40 வயது  இளையவரான பெண்ணை திருமணம் செய்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

இதனை காரணம் காட்டி 1949-ம் ஆண்டு தந்தை பெரியாரிடமிருந்து விலகிய அண்ணாதுரை, திராவிட முன்னேற்ற கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.1952 தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியை பெரியார் ஆதரித்தார் இதனால் பொதுவுடைமைக் கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்தது. 1952 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக் கட்சிக்குப் பெரும்பான்மையான இடங்கள் கிடைக்காத சூழலில்,  இராஜாஜியை சென்னை மாகாண முதலமைச்சர் ஆக்கினார் பெரியார். 1953இல் இராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அதனை பெரியார் கடுமையாக எதிர்த்தார்.. பிராமண எதிர்ப்பும், கடவுள் மறுப்பும் பெரியாரின் கொள்கையாக இருந்தபோதும் அதை தனிப்பட்ட நபர்களை வெறுப்பதற்கான வழிகளாக அவர் மாற்றிக்கொண்டதில்லை.

தன்னுடைய கருத்துகளையும் யாரிடமும் திணிப்பதில்லை. பிராமணராக இருந்தபோதிலும் ராஜாஜியுடன்  பெரியார்  கடைசிவரை நல்ல நட்பைப் பேணினார். கடவுள் நம்பிக்கை உடைய குன்றக்குடி அடிகளார் போன்றவர்களோடும் பெரியாருக்கு நல்ல நட்பு இருந்தது. தமிழ் மாகாண காங்கிரசுக் கட்சியின் தலைவராக இருந்த காமராசரும் பெரியார் வழியைப் பின்பற்றி குலக் கல்வித் திட்டத்தைப் எதிர்த்தார். 1962-ம் ஆண்டு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளராக கி. வீரமணியை நியமித்த பெரியார், கட்சிப் பொறுப்பை  அவரிடம் ஒப்படைத்தார். 

1973-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி பெரியாருக்கு ‘யுனஸ்கோ விருது’  வழங்கப்பட்டது. 1973-ம் ஆண்டு டிசம்பர் 19-ம் தேதி சென்னை தியாகராய நகரில் நடைபெற்ற கூட்டத்தில் பெரியார் தன் உடல் நலத்தையும் பாராமல் உரையாற்றினார். இதுவே அவரின் கடைசிக் கூட்டமாக அமைந்தது. 1973-ம் ஆண்டு, டிசம்பர் 24-ம் தேதி 94 வது வயதில் பெரியார்   காலமானார். பகுத்தறிவு பகலவன்,தென்னாட்டு சாக்ரடீஸ்,வெண்தாடி வேந்தர்  என்ற போற்றுதல் ஒருபுறம் இருந்தாலும், பெரியாரின்  வாழ்க்கை எதிர்ப்புகளும் போராட்டங்களும் சர்ச்சைகளும்  நிறைந்ததாகவே  இருந்ததது. எனினும் அவர் இந்த சமுதாயத்தின் நலனுக்காக விதைத்த  சிந்தனை விதைகள் ஆயிரமாயிரம். அது மனித சமுதாயத்துக்கும் மனித மேம்பாட்டுக்கும் எக்காலத்துக்கும் பொருந்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. ..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *