பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்படும் – கே.பி.அன்பழகன்

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வரும் 25-ஆம் தேதி வெளியிடப்படும் என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-17

இது தொடர்பாக தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு என்ஜினீயரிங் கல்லூரிகள், அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்பு கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்களுக்கான இணையதள பதிவு முடிவடைந்து, பதிவு செய்த அனைத்து மாணவர்களுக்கும் ரேண்டம் எண் கடந்த மாதம் 26-ந்தேதி வழங்கப்பட்டது.

அதனைதொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று சூழ்நிலையின் காரணமாக மாணவர்களை நேரில் அழைக்காமல் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்களை என்ஜினீயரிங் சேர்க்கை சேவை மையங்கள் மூலமாக திறம் பெற்ற பேராசிரியர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரி, முன்னாள் ராணுவத்தினர் நல அதிகாரி மற்றும் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்புடன் சான்றிதழ்களின் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது.

பெரும்பான்மையான மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு பணி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில மாணவர்கள் சரியாக சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் கோரியுள்ளதால், மாணவர்களின் நலன் கருதி 17-ந்தேதி (இன்று) வெளியிடப்பட வேண்டிய தரவரிசை பட்டியல் வருகிற 25-ந்தேதியன்று வெளியிடப்படும் என்று தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.

மேலும் மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் தங்களின் கணக்கில் (அக்கவுண்ட்) உள்ளே நுழைந்து (லாகின் செய்து) சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு விட்டதா? என்பதை உறுதி செய்து கொள்ளலாம். மாணவர்களுக்கு சந்தேகம் இருந்தால் 044-22351014 மற்றும் 044-22351015 என்ற தொலைபேசி எண்ணில் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *