பிரதமர் மோடியின் 70வது பிறந்தநாள்.. அரசியல் தலைவர்கள் வாழ்த்து, பாஜகவினர் உற்சாக கொண்டாட்டம்..!!
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் பல்வேறு பணிகளுடன் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது.
டெல்லி, செப்-17

பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் பாஜகவினர் கேக் வெட்டியும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர். மோடியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு அரசியல் தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், பிரபலங்கள், வெளிநாடுகளின் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் பல்வேறு கட்சித்தலைவர்கள், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ரஷிய அதிபர் புதின், நேபாள பிரதமர் ஷர்மா ஒலி உள்ளிட்ட உலக தலைவர்களும் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு பாஜக சார்பில் நாடு முழுவதிலும் சேவை வாரம் கொண்டாடப்படுகிறது. செப்டம்பர் 14 தொடங்கிய இந்த சேவை வாரம் 20 ம் தேதி வரை நடைபெறுகிறது. கட்சி தொண்டர்கள் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. சேவை வார விழாவை முன்னிட்டு ரத்ததான முகாம்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் போன்ற பணிகளில் பாஜக தொண்டர்கள் ஈடுபட்டுள்ளனர்.