மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் தேர்வு

மாநிலங்களவை துணைத் தலைவராக ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லி, செப்-14

மாநிலங்களவை துணைத் தலைவராக இருந்த பி.ஜே.குரியன் கடந்த 2018-ம் ஆண்டு ஜூலை1ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். இதனையடுத்து, தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக போட்டியிட்ட பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஐக்கிய ஜனதாதள எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங்க்கு 125 உறுப்பினர்களின் ஆதரவு கிடைத்ததால் அவர் வெற்றி பெற்று, முதன்முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக கடந்த 2018-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்டார்.

இந்தநிலையில் மாநிலங்களவையின் துணைத் தலைவராக இருந்த எம்.பி. ஹரிவன்ஸ் பதவிக்காலம் முடிந்ததையடுத்து புதிய துணைத் தலைவரைத் தேர்வு செய்ய தேர்தல் இன்று மாநிலங்களவையில் நடைபெற்றது. அந்த பதவிக்கு எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் மீண்டும் பாஜக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்பட்டார். மாநிலங்களவைத் துணைத் தலைவர் பதவிக்கு, எதிர்க்கட்சிகள் அனைவரும் கூட்டாகச் சேர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜாவை வேட்பாளராக நிறுத்தினர்.

தொடர்ந்து, பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, எம்.பி ஹரிவன்ஸ் சிங்கை முன்மொழிந்ததையடுத்து குரல் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதனையடுத்து, எம்.பி. ஹரிவன்ஸ் நாராயணன் சிங் 2-வது முறையாக மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதா தளத்தை சேர்ந்த மனோஜ் ஜா தோல்வி அடைந்தார்.

மாநிலங்களவை துணைத்தலைவராக 2-வது முறை தேர்வு செய்யப்பட்ட ஹரிவன்ஸ் நாராயண் சிங்கிற்கு மாநிலங்களவையில் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *