நடிகர் சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்..ஓய்வுபெற்ற 6 நீதிபதிகள் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்.!!!

நடிகர் சூர்யாவின் அறிக்கையை கொண்டு அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாம் என ஓய்வுபெற்ற நீதிபதிகள் 6 பேர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை, செப்-14

நீட் தற்கொலை விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த, அறிக்கையில், நீதிமன்றத்தை குறிக்கும் செய்தியான நடிகர் சூர்யா பதிவிட்டிருந்தார். ‘கொரோனா தொற்று காரணமாக உயிருக்கு பயந்து, நீதிமன்றமே வழக்குகளை வீடியோ கான்ஃபிரஸ் மூலம் நடத்தி வரும் நிலையில், மாணவர்கள் தேர்வெழுத உத்தரவை பிறப்பித்துள்ளது நீதிமன்றம்’ என நீதிமன்றம் தொடர்பான ஒரு கருத்தை தனது அறிக்கையில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், இந்த கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், நடிகர் சூர்யா மீது ‘நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை’ எடுக்கவேண்டுமென்று தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கிடையே, நடிகர் சூர்யா மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என 6 ஓய்வுபெற்ற நீதிபதிகள் தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், து.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம்.அக்பர் அலி ஆகியோர் எழுதியுள்ள அந்தக் கடிதத்தில், நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளதை போல எந்த நடவடிக்கையும் எடுக்க அவசியம் இல்லை. 4 மாணவர்கள் மரணம் காரணமாக நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்களை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். சூர்யாவின் அறக்கட்டளை மூலமாக நூற்றுக்கணக்கான ஏழை மாணவர்கள் உயர் கல்வி முடித்து நல்ல வேலைவாய்பை பெற்றுள்ள நிலையில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் பெருந்தன்மையாக விட்டுவிட வேண்டும். சென்னை உயர் நீதிமன்றத்தின் மாண்பு, மதிப்பு மீது அக்கறை உள்ளதால், தேவையில்லாத சர்ச்சைகளுக்கு இடம்கொடுக்க வேண்டாமென கோரிக்கை விடுப்பது எங்கள் கடமை என தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *