அயோத்தி வழக்கு: வாதங்கள் நிறைவு, தீர்ப்பு ஒத்திவைப்பு

புதுடெல்லி, அக்டோபர்-16

அயோத்தி வழக்கில் 40 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒத்திவைத்துள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி பகுதியில் உள்ள 2.77 ஏக்கர் நிலம் சர்ச்சைக்குரியதாக உள்ளது. இந்த நிலத்தை சன்னி வக்பு போர்டு, நிர்மோஹி அகாரா, ராம்லல்லா ஆகிய மூன்று அமைப்புகளும் சொந்தம் கொண்டாடி வருகின்றன.

இது தொடர்பாக நீண்ட ஆண்டுகளாக அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை மூன்று அமைப்புகளும் சமமாக பிரித்துக் கொள்வது தொடர்பாக உத்தரவிடப்பட்டது. ஆனால் அலகாபாத் நீதிமன்ற தீர்ப்பை மூன்று அமைப்புகளும் ஏற்கவில்லை. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. 14 மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்கள் அனைத்தும் ஒன்றாக விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே சமரச பேச்சு வார்த்தை நடத்தி இந்த பிரச்சினைக்கு தீர்வு காண ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அயோத்தி பிரச்சினை மேல்முறையீடு வழக்குகளை விரைந்து முடிக்க முடிவு செய்து, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தினமும் விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆகஸ்டு 6-ம் தேதி முதல் தினசரி அயோத்தி வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதைத்தொடர்ந்து, கடந்த 40 நாட்களாக நடைபெற்ற வாதங்கள் அக்டோபர் 16-ம் தேதி மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், வாதங்கள் முடிந்துள்ள நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. இதனால் நாடு முழுவதும் அயோத்தி வழக்கு விசாரணையும் தீர்ப்பும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை கருத்தில் கொண்டு ஏற்கனவே அயோத்தியில் 144 தடை உத்தரவை உத்தரபிரதேச மாநில போலீசார் பிறப்பித்துள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் நவம்பர் 18-ம் தேதியுடன் ஓய்வு பெற இருப்பதால், அதற்குள் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *