நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாததற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்..!

நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவர்களுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றாதது கண்டிக்கத்தக்கது என்று எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-14

தமிழக சட்டப்பேரவையின் 3 நாள் கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்கள் முகக்கவசம் அணிந்து பேரவையில் பங்கேற்றனர். பேரவைத் தொடங்கியதும் குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்பி வசந்தகுமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. மேலும் கொரோனா பாதிப்பால் இறந்தவர்களுக்கும் பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சட்டப்பேரவை கூட்டத்தை பேரவைத் தலைவர் தனபால் நாளைக்கு ஒத்திவைத்தார்.

தொடர்ந்து கலைவாணர் அரங்கில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க.ஸ்டாலின், நீட் தேர்வால் என்னற்ற மாணவ, மாணவிகள் தற்கொலை செய்து கொண்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் கொடுமை தொடர்ந்து நடந்துக்கொண்டிருக்கிறது. நீட் தேர்வினால் தற்கொலை செய்த மாணவர்களுக்காகவும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வலியிறுத்தினேன். ஆனால் எனது கோரிக்கையை சபாநாயகர் ஏற்கவில்லை. இது வருத்தத்திற்குரியது. கண்டனத்திற்குரியது. புதிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு குறித்தும் பேச அனுமதி கோரியுள்ளோம். மாணவர்கள் உயிரிழப்பு குறித்தும் விவாதிக்க வேண்டும். எனவே, பேரைக் கூட்டம் 2 நாள் போதாது என்று எதிர்க்கட்சி சார்பில் வலியுறுத்தியுள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி முதல்வரோ, அமைச்சரோ ஒருமுறைகூட பிரதமரை சந்தித்து இதுவரை வலியுறுத்தியதில்லை என்றார்.

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக இன்றைய தினம் எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட எம்.எல்ஏக்கள், ‘நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்’, ‘தமிழக மாணவர்களை காக்க வேண்டும்’ (‘BAN NEET’) என்ற முகக்கவசம் அணிந்து சட்டமன்ற கூட்டதொடரில் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *