பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் வதந்தி.. நடிகர் விஷால்
தான் பாஜகவில் இணையவிருப்பதாக வெளியாகும் தகவல்கள் உண்மை இல்லை என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
சென்னை, செப்-13

நடிகர் சங்கத்தேர்தல், தயாரிப்பாளர் சங்க தேர்தல் போன்றவற்றில் போட்டியிட்டு நடிகர் விஷால் வெற்றி பெற்றார். இதையடுத்து அரசியலிலும் கால்பதிக்க துடித்தார். அதன்படி ஜெயலலிதா மறைவிற்கு பிறகு ஆர்.கே. நகர் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலுக்காக வேட்பு மனுத்தாக்கல் செய்தார். ஆனால் அவரின் மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. இதையடுத்து விஷால் போராட்டத்தில் ஈடுபட்டது அப்போது பரபரப்பானது.
தற்போது வரும் 2021 சட்டமன்றத்தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் அனைத்தும் ஆயத்தமாகி வருகின்றன. ஒவ்வொரு தமிழக கட்சியும் தங்கள் பலத்தை நிரூபிக்க முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. பல அரசியல்வாதிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்கு தாவும் செயலையும் செய்து வருகின்றனர். கட்சியில் இல்லாத பலர் தங்களுக்கு பிடித்த கட்சிகளில் சேர்ந்தும் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஷால் பாஜகவில் இணைய இருப்பதாகவும், பா.ஜனதா தமிழக தலைவர் முருகனை சந்திக்க நேரம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி வந்தன. பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஷால் தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் விஷால் பாஜகவில் இணைய உள்ளதாக வெளியான தகவல் வதந்தி என விஷாலின் தனி மேலாளர் ஹரி விளக்கம் அளித்துள்ளார்.