நீட் தேர்வு நிறைவடைந்தது..!

நாடு முழுவதும் நீட் நுழைவுத்தேர்வு மாலை 5 மணிக்கு நிறைவடைந்தது.

டெல்லி, செப்-13

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ இளநிலை படிப்புகளுக்கு தேசிய அளவில் மாணவர்களை தேர்வு செய்ய தேசிய தகுதி நுழைவுத்தேர்வு எனப்படும் ‘நீட்’ தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ’நீட்’ தேர்வு நடைபெறுவதில் கொரோனா பாதிப்பு காரணமாக சற்று கால தாமதம் ஏற்பட்டது.

இந்தியா முழுவதும் 15 லட்சத்து 97 ஆயிரத்து 433 பேர் ‘நீட்’ தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்காக நாடு முழுவதும் 154 நகரங்களில் 2,546 மையங்களில் ‘நீட்’ தேர்வை நடத்த முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதால் தேர்வு மையங்களின் எண்ணிக்கை 3,842 ஆக உயர்த்தப்பட்டது.
இந்த தேர்வு மையங்களில் ஒவ்வொரு அறையிலும் 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அனுமதித்து தேர்வை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் நாடு முழுவதும் ’நீட்’ தேர்வு இன்று நடைபெற்றது. கொரோனா பரவலினால் நீட் தோ்வு மையங்களில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று காலை 11 மணி முதல் மாணவர்கள் தேர்வு மையங்களுக்குள் உடல் வெப்ப பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். பிற்பகல் 2 மணிக்குத் தேர்வு தொடங்கிய நிலையில் 5 மணி வரை நடைபெற்றது.

நீட் நுழைவுத் தேர்வு எளிதாக இருந்ததாக தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *