நீட் தேர்வு பயத்தால் ஒரே நாளில் 2 மாணவர்கள் தற்கொலை..!!

செப்-12

நீட் தேர்வு பயத்தால் மாணவ, மாணவிகளின் தற்கொலைகள் தொடர்கதையாகி விட்டது. கடந்த சில நாட்களுக்கு முன், நீட் தேர்வுக்காக தயாரான அரியலூரைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் மன உளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தின் அதிர்ச்சி அலை ஓய்வதற்குள் அடுத்த சம்பவம் மதுரை தல்லாகுளம் பகுதியில் நடந்துள்ளது. எஸ்ஐ மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை ஆயுதப்படையில் எஸ்ஐ ஆக பணியாற்றுபவர் முருகுசுந்தரம். தல்லாகுளம் பகுதியிலுள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மகள் ஜோதி ஸ்ரீதுர்கா (19). டாக்டராக வேண்டுமென்ற லட்சியத்திலேயே மேல்நிலை வகுப்பை முடித்துள்ளார். 12ம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்றதும், நீட் நுழைவுத் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். தனது பெரும்பான்மையான நேரத்தை படிப்பிற்காக செலவிட்டுள்ளார்.
மெரிட் அடிப்படையில் சிறந்த மருத்துவ கல்லூரியில் தான் சீட் பெற வேண்டும் என்ற எண்ணத்தில் படித்துள்ளார். நாளை நீட் தேர்வு எழுத வேண்டும் என்பதால் கடந்த ஒரு வாரமாக படிப்பிற்கு அதிக நேரம் செலவிட்டு வந்துள்ளார். நேற்று மட்டும் நள்ளிரவு ஒரு மணி வரை படித்துள்ளார். ஆனால், தோல்வி பயம் ஏற்பட்டதால் வீட்டில் யாருக்கும் தெரியாமல் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த நேரத்தில் அதிகாலை 5 மணியளவில் வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து தல்லாகுளம் போலீசார் விரைந்து வந்து மாணவி ஜோதி ஸ்ரீதுர்காவின் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை செய்து கொண்ட ஜோதி ஸ்ரீதுர்கா, கடந்தாண்டு நீட் தேர்வில் பங்கேற்றுள்ளார். இதில் அவர் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இந்தாண்டு எப்படியும் வெற்றி பெற வேண்டுமென கடுமையாக படித்துள்ளார். ஆனால், பயம் காரணமாக அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லையெனவும், நீட் தேர்வு தோல்வி பயத்திலேயே தற்கொலை செய்து கொண்டதாகவும் 3 பக்கத்திற்கு கடிதம் எழுதி வைத்துள்ளார். இதுதொடர்பாக ஒரு ஆடியோவும் பதிவு செய்துள்ளார்.

மதுரை மாணவி ஜோதிஸ்ரீ துர்கா உயிரிழந்த துயரம் ஆறுவதற்குள் மேலும் ஒரு மாணவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி இலக்கியம்பட்டி செவத்தான் கவுண்டர் தெருவை சேர்ந்தவர் மணிவண்ணன், ஜெயசித்ரா தம்பதியினரின் மகன் ஆதித்யா நாளை நீட் தீர்வு நடக்க இருந்த நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார். தருமபுரி அருகே நீட் தேர்வு எழுத தயாராகி வந்த மாணவன் ஆதித்யா(20) தற்கொலை செய்துகொண்டுள்ளார். தற்கொலைக்கான காரணம் குறித்து கடிதம் எழுதி வைத்துவிட்டு ஆதித்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தாய் சேலத்துக்கு சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த மாணவன் மன உளைச்சலால் விபரீத முடிவு எடுத்துள்ளார். ஒரே நாளில் நீட் தேர்வு அச்சத்தால் 2 மாணவர்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *