நீட் தேர்வை வைத்து இன்னும் எத்தனை பேரின் உயிர்களை காவு வாங்கப் போகிறீர்கள்? – வைகோ ஆவேசம்

சென்னை, செப்-12

Madurai: Tamilnadu: 24/03/2014: MDMK general secretary and party’s Virudhunagar Lok Sabha contituency cadidate Vaiko speaking at Thoppur in Madurai on Monday during the election campaign.Photo:R. Ashok

இது குறித்து மதிமுக பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ;-

அரியலூர் மாவட்டம் – செந்துறை அருகே இலந்தங்குழி ஊரைச் சேர்ந்த 19 வயது விக்னேஷ் செப்டம்பர் 8 ஆம் தேதி இரவு நீட் தேர்வு பயத்தால் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சோகம் நிகழ்ந்தது.

இந்த அதிர்ச்சி மறைவதற்குள், இன்று மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த மாணவி ஜோதி ஸ்ரீ துர்கா நாளை நீட் தேர்வு எழுத ஆயத்தமாகிக் கொண்டு இருந்த நிலையில், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதியபோது, தேர்ச்சி பெற முடியாததால், இந்த ஆண்டும் அதே நிலை ஏற்படுமானால் குடும்பத்தினர் ஏமாற்றம் அடைவார்கள் என்ற அச்சத்தால், கடிதம் எழுதி வைத்துவிட்டு, தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி, நெஞ்சைப் பிளக்கின்றது.

கொரோனா காலத்திலும் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு நடத்தியே தீருவோம் என்று மத்திய பா.ஜ.க. அரசு அறிவித்தது. உச்சநீதிமன்றமும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியமும், திட்டமிட்டபடி செப்டம்பர் 13 அன்று நீட் தேர்வை நடத்துவதற்குத் தடை இல்லை என்று தீர்ப்பு அளித்து விட்டது. இதனால் தமிழகத்தில் இரண்டு அப்பாவி மாணவர்கள் உயிர் பறிபோய் விட்டது.

2017 இல் நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால், அரியலூர் மாவட்டம், குழுமூரைச் சேர்ந்த அனிதா தற்கொலை செய்துகொண்டது தமிழகத்தை உலுக்கியது. அதைப் போல, 2018 இல் விழுப்புரம் மாவட்டம் – செஞ்சியை அடுத்த பெரவளூர் பிரதீபா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி திருவள்ளூர் அவென்யூ பகுதியைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்து ஓட்டுநர் கண்ணன் என்பவரது மகள் சுபஸ்ரீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி என்ற மாணவியும் 2018 இல் தற்கொலை செய்துகொண்டனர்.

2019 இல் நடந்த நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால், திருப்பூரைச் சேர்ந்த ரிதுஸ்ரீ, விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் கூனி மேடு மீனவ கிராமத்தைச் சேர்ந்த மோனிசா ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். அதே போல, தஞ்சை மாவட்டம் – பட்டுக்கோட்டையைச் சேர்ந்த மாணவி வைஸ்யா, நீட் தேர்வில் தோல்வி அடைந்த மன வேதனையில் தீக்குளித்துத் தற்கொலை செய்துகொண்டார்.

கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கிடசாமி சாலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த இரவிச்சந்திரன் என்பவரது மகள் சுபஸ்ரீ இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்காக தனியார் நிறுவனத்தில் பயிற்சி பெற்று வந்தார். செப்டம்பர் 13 அன்று நீட் தேர்வு நடத்துவது உறுதி என்று மத்திய அரசு தான்தோன்றித்தனமாக அறிவித்ததால், மனஉளைச்சல் ஏற்பட்டு, மாணவி சுபஸ்ரீ கடந்த ஆகஸ்டு 18 ஆம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

மருத்துவப் படிப்புக்கு நீட் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று மத்திய பா.ஜ.க. அரசு, பிடிவாதமாக இருப்பதால், இன்னும் எத்தனை பேரின் உயிர்களை காவு வாங்கப் போகின்றார்களே?

சாதாரண ஏழை, எளிய, பின்தங்கிய பட்டியல் இனத்தைச் சேர்ந்த மாணவர்கள் 12 ஆம் வகுப்புத் தேர்வில் எவ்வளவு அதிக மதிப்பெண்கள் எடுத்து இருந்தாலும், நீட் தேர்வால் வடிகட்டப்பட்டு, அவர்களின் மருத்துவக் கனவு சிதைக்கப்பட்டு வருகின்றது. இது மிகவும் கண்டனத்துக்கு உரியது. மத்திய அரசின் இக்கொடூரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கத் தமிழக அரசு ஆயத்தமாக இல்லை. ஒட்டுமொத்தமாக நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டால்தான் இதுபோன்ற உயிர்ப் பலிகள் தடுக்கப்படுவதுடன், சமூக நீதியையும் நிலை நாட்ட முடியும் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *