வடிவேல் பாலாஜி குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்ற சிவகார்த்திகேயன்

மறைந்த நடிகர் வடிவேல் பாலாஜியின் குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-11

நடிகா் வடிவேல் பாலாஜி (42) மாரடைப்பு காரணமாக சென்னையில் நேற்று காலமானாா். சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்பு, போதிய பணவசதி இல்லாததால் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று (செப்டம்பர் 10) காலை காலமானார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அது இது எது நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்தபோது சிரிச்சா போச்சு பகுதியில் வடிவேல் பாலாஜி பங்கேற்றுள்ளார். இருவரும் கூட்டணி அமைத்து நகைச்சுவை வெடிகளை அள்ளி வீசியதால் ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்றார்கள். அப்போதிலிருந்து சிவகார்த்திகேயன் – வடிவேல் பாலாஜி இருவருமே நெருங்கிய நண்பர்களாக வலம் வந்தனர்.

தன்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த வடிவேல் பாலாஜியின் மரணம் சிவகார்த்திகேயனை உலுக்கியுள்ளது. இதனால் வடிவேல் பாலாஜியின் இரு குழந்தைகளின் கல்விச் செலவை ஏற்பதாகக் கூறியுள்ளார். இதைப் பற்றி சிவகார்த்திகேயன் முறையாக அறிவிக்கவில்லையென்றாலும் வடிவேல் பாலாஜியின் குடும்பத்தினரிடம் இத்தகவலைக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளார். சிவகார்த்திகேயனின் இந்த நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் சமூகவலைத்தளங்கள் வழியாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *