போஸ்டர்லாம் ஒட்டாதீங்க.. ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு உத்தரவு..!!

சென்னை, செப்-10

இன்று வருவார், நாளை வருவார் என ரஜினி புதுக்கட்சி அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகர்கள் தற்போது ஆதங்கமடைந்து வருகின்றனர். கடந்த 2017-ம் ஆண்டில் நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கப்போவதாக அறிவித்தார். அப்போது முதலே ரஜினி ரசிகர்கள், அவருடைய அரசியல் வருகைக்காக காத்திருக்கிறார்கள். ஆனால், 3 ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றி வெளிப்படையாக எதுவும் தெரியவில்லை. மேலும், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரஜினி அமைதியாகிவிட்டார். தேர்தல் நெருங்கிவரும் வேளையில் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றம் என முழங்கிய ரஜினியின் அமைதி, ரஜினி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போஸ்டர்கள் அடித்து, ‘இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை’ என்று ரஜினி சொன்ன வாக்கியத்தைச் சொல்லி ரஜினியை அரசியலுக்கு அழைக்கத் தொடங்கியுள்ளனர்.

“தேர்தலுக்கு இன்னும் 6 மாசம்தான் இருக்கு.. இப்போதுகூட, அரசியல் முடிவை தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார் தலைவர்.. இப்போ அதிமுக, திமுக உட்பட எல்லா கட்சிகளும் தேர்தல் வேலையில் இறங்கிவிட்டன.. ஆனால், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார்… இதெல்லாம் எங்களுக்கு வருத்தமாக உள்ளது… கூடிய சீக்கிரம் அவர் ஒரு நல்ல முடிவை அறிவிக்க வேண்டும்” என்று ஆதங்க கோரிக்கை விடுத்தவாறே இருந்தனர்.

இந்நிலையில், மன்றத்து நிர்வாகிகளுக்கு ஒரு உத்தரவு வந்துள்ளாம்.. அதாவது தலைமையிடம் இருந்து உத்தரவு வரும் வரை போஸ்டர்கள் அடிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாம். மேலும் தலைமை உத்தரவு இல்லாமல் தன்னிச்சையாகவும் செயல்பட வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாம்.. இந்த உத்தரவை ரஜினி மன்ற நிர்வாகிகளுக்கு அதன் தலைமை நிர்வாகி சுதாகர் வாய்மொழி உத்தரவாக பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *