விக்னேஷ் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பாமகவினர் எதிர்ப்பு.. திமுக சார்பில் ரூ. 5 லட்சம் நிதியுதவி

நீட் தேர்வால் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவரின் உடலுக்கு இன்று அஞ்சலி செலுத்த வந்த திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாமக-வினர் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

அரியலூர், செப்-10

நீட் தேர்வுக்கு தயாராகி வந்த அரியலூர் மாவட்டம், செந்துறை அடுத்த எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த மாணவர் வி.விக்னேஷ். இவர் மன உளைச்சலுக்கு ஆளாகி கடந்த புதன்கிழமை கிணற்றில் குதித்து தற்கொலை செய்துக் கொண்டார். இதையடுத்து பிரேத பிரசோதனைக்கு பிறகு,எலந்தங்குழி கிராமத்தில் வைக்கப்பட்டிருந்த விக்னேஷ் உடலுக்கு அனைத்து தரப்பினரும் அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில், அவரது உடலுக்கு திமுக இளைஞரணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்த இன்று மாலை வந்தார். அப்போது, விக்னேஷ் குறித்து இதுவரை எந்த ஒரு அறிக்கையும் திமுக வெளியிடவில்லை எனக்கூறி உதயநிதி ஸ்டாலினை அஞ்சலி செலுத்த விடாமல் பாமக-வினர் தடுத்து நிறுத்தியதுடன், விக்னேஷின் உடலை மாற்று வழியில் இடுகாட்டுக்கு தூக்கிச் சென்றனர். அங்கு குடும்பத்தினர், பொதுமக்கள் முன்னிலையில் விக்னேஷ் உடல் தகனம் செய்யப்பட்டது. தன்பின்னர்,விக்னேஷின் தந்தை விஸ்வநாதனை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் ரூ.5 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினார்.

தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின், “திமுக நீட்தேர்வை ரத்து செய்யக்கோரி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்காக அண்மையில் திமுக இளைஞரணி மற்றும் மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் மருத்துவர் கனவை தகர்க்கும் நீட் தேர்வை மத்திய,மாநில அரசுகள் ரத்து செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *