கிசான் திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

கிசான் திட்ட முறைகேடு பற்றி சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை, செப்-10

இதுகுறித்து அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது;-

விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ், தாமாகவே பதிவு செய்து கொள்ளும் முறையால்தான், முறைகேடு நடைபெற்று விட்டது எனக் கூறி- விவசாயிகளுக்குப் போக வேண்டிய 110 கோடியை போலி நபர்கள் கொள்ளையடிக்கத் துணை போன தனது ஆட்சியின் முறைகேட்டைத் திசை திருப்பி – மறைக்க முயற்சிக்கும் முதலவர் எடப்பாடி பழனிசாமிக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தாமாகவே பதிவு செய்து கொண்டவர்கள் ஒருவரோ – இருவரோ அல்ல; நூறு பேரோ – இருநூறு பேரோ அல்ல; ஆறு லட்சம் போலி நபர்கள்! கரோனா பேரிடர் காலத்தில் – விவசாயிகளுக்குச் சேர வேண்டிய நிதியை, இடைமறித்துக் கொள்ளையடித்துள்ளார்கள். இதில் முதலமைச்சரின் சொந்த மாவட்டத்தில் மட்டும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலி நபர்கள் பணம் பெற்றுள்ளார்கள்! ஆளுங்கட்சியினரின் துணை இல்லாமல், இது அறவே சாத்தியமில்லை.

ஆகவே கீழ்மட்டத்தில் உள்ள ஊழியர்கள், கான்டிராக்ட் ஊழியர்களை டிஸ்மிஸ் செய்து விட்டோம், புரோக்கர்களைக் கைது செய்து விட்டோம் என்றெல்லாம் விளையாட்டும், வேடிக்கையும் காட்டாமல் – திசை திருப்பல் இன்றி – விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 110 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ள ஊழலில் உண்மைக் குற்றவாளிகளை – 6 லட்சம் போலிகள் சேருவதற்குக் காரணமானவர்களைக் கைது செய்ய – உடனடியாக சி.பி.ஐ. விசாரணைக்குப் பரிந்துரை செய்யுமாறு முதலமைச்சர் திரு. பழனிசாமி அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *