500 ரூபாயை வைத்து குடும்பம் நடத்த முடியுமா? – மத்திய அரசுக்கு ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அளிக்கப்பட்ட ரூ. 500 மூலம் இன்றுள்ள நிலையில் குடும்பத்தை நடத்த முடியுமா? என்று மத்திய அரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

டெல்லி, செப்-10

மத்திய நிதியமைச்சகம் கடந்த செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுக்க கொண்டுவரப்பட்ட பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட ஏழைகள், வேலையிழப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதான் மந்திரி கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் 42 கோடி மக்களுக்கு ரூ.68.820 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், கடந்த மார்ச் 26 ஆம் தேதி முதல் ஏழைகள், பெண்கள் , முதியோர், விவசாயிகளுக்கு ரூ.1.70 லட்சம் கோடி நிதியுதவியும், இலவசமான உணவு தானியங்களை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார்.

மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பை தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவா் வெளியிட்ட பதிவுகளில் மேலும் கூறியிருப்பதாவது: “பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிகளும் எவ்வளவு தொகை பெற்றார்கள்?. இதற்கு பெயர் நிவாரண் என்று உண்மையில் சொல்ல முடியுமா? அல்லது பெயரளவுக்கு செய்யப்பட்டதா? ஜன் தன் வங்கிக் கணக்கு வைத்திருக்கும் 20.6 கோடி பெண்களுக்கு மூன்று மாதங்களில் ரூ.305 கோடி அதாவது 3 மாதங்களுக்கு முறையே ரூ.500 வீதம், ரூ.1,500 வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பப் பெண், ரூ.500 இல் குடும்பத்தை நடத்த முடியுமா? புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 2.66 கோடி பேர் 2 மாதங்களில் 2.67 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களை பெற்றுள்ளார்கள். அதாவது மாதத்துக்கு 5 கிலோ வீதம் வழங்கப்பட்டுள்ளது. ஒரு குடும்பத்துக்கு 5 கிலோ உணவு தானியம் போதுமானதாக இருக்குமா?

தேசிய சமூக உதவித் திட்டத்தின்(என்எஸ்ஏபி) கீழ் 2.81 கோடி பேருக்கு ரூ.2,814 கோடி அதாவது, ஒரு நபருக்கு ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் போதுமானதாக இருக்குமா?

ஒவ்வொரு பயனாளியும் பிரதமர் கரீப் கல்யான் யோஜனா திட்டத்தின் கீழ் எவ்வளவு பெற்றார்? இதற்கு பெயர் ‘நிவாரணம்’ என்று சொல்லமுடியுமா அல்லது பெயரளவுக்கு செய்யப்பட்டதா?
என்று சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *