அனைத்து மத பூஜையுடன் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைப்பு..!

அம்பாலா விமானப்படைத் தளத்தில் சேர்க்கப்பட்ட 5 ரஃபேல் போர் விமானங்களுக்கு அனைத்து மத வழிபாடுகளுடன் பூஜை நடத்தப்பட்டது.

டெல்லி, செப்-10

உலகின் அதிநவீன போர் விமானமான ரபேல் விமானங்களை பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் தயாரித்து வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதில் முதல்கட்டமாக, 5 ரபேல் போர் விமானங்கள் சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. துல்லிய தாக்குதலுக்கு பெயர்பெற்ற இந்த விமானங்கள், ஜூலை 27-ந் தேதி, அரியானா மாநிலம் அம்பாலாவில் உள்ள விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்தன.

இந்த நிலையில், ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 5 ரஃபேல் போர் விமானங்கள் சர்வ மத பூஜைகளுடன் இந்திய விமானப்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரான்ஸ் பாதுகாப்பு அமைச்சர் ஃபுளோரன்ஸ் பார்லி, முப்படைத் தளபதி விபின் ராவத், விமானப்படை தலைமைத் தளபதி ஆர்.கே.எஸ்.பதௌரியா, பாதுகாப்புத் துறை செயலர் அஜய் குமார், பிரான்ஸ் பாதுகாப்புத் துறை அதிகாரிகளும் டஸால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.

ரஃபேலின் வருகை மூலம் இந்திய விமானப்படையின் திறன் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பிரான்ஸ், எகிப்து, கத்தார் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து, ரஃபேலை வைத்துள்ள 4வது நாடாக இந்தியா மாறி உள்ளது. எல்லையில் சீனா தொடர்ந்து வாலாட்டிக் கொண்டிருப்பதால் விரைவில் ரஃபேல் விமானங்கள் லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வாய்ப்புகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *