நாம் தமிழர் கட்சியை உடைத்துவிட முடியும் என்பது பைத்தியக்காரத்தனம்.. கொந்தளித்த சீமான்..!

சென்னை, செப்-9

யூ டியூப் சேனல் ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:

பேராசிரியர் கல்யாணசுந்தரம் நாம் தமிழர் கட்சி ஆரம்பித்து 2,3 ஆண்டுகள் கழித்துதான் வந்து இணைகிறார். இடையில் அவர் மனைவி ஜெர்மனிக்கு படிக்கச் சென்ற போது போய்விட்டார். அப்புறம் அவர் வேலை செய்யவில்லை. அவர் நண்பர் ராஜீவ்காந்தியிடம், உங்க நண்பர் வந்து வேலைசெய்ய மாட்டாராடா?என கேட்ட பிறகு வேலை செய்தார். சொந்த பிள்ளைகள் போல அங்கீகரித்துதான் எல்லா இடத்துக்கும் போய் பேசுங்கள் என தட்டிக் கொடுத்து அனுப்பி வைத்தோம். தன்னிடம் எந்த குறையும் இல்லை. நான் பேசவில்லை என்கிறார்கள். நான் பேசாத அளவுக்கு என்னிடம் எவ்வளவு காயத்தை அவர் ஏற்படுத்தியிருக்கிறார் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். இதைபற்றி பேச வேண்டாம்.. அமைதியாக கடந்து செல்ல வேண்டும் என நினைத்தேன். அவர் நேர்மையாளர், நியாயவாதி போல நான் பேசவில்லை என்கிறார்கள்.

நாம் தமிழர் கட்சியைப் போன்ற ஒரு ஜனநாயக அமைப்பு இல்லை. கட்சியில் முதலில் தொடங்கப்பட்டது இளைஞர் பாசறை. அதை தொடங்கி இவர்களை நியமித்து வெளிநாடுகளில் எல்லாம் போய் பேசுங்கள் என வளர்த்துவிட்டோம். ஊடக வெளிச்சம், மேடைகளில் பேசும்போது கை தட்டல் கிடைப்பது ஆகியவற்றால் தாங்கள் பெரிய தலைவர் என்கிற எண்ணம் வந்துவிடுகிறது இவர்களுக்கு.. இதனால் கட்சிக்குள்ளேயே தனக்கான ஒரு ஆதரவு வட்டத்தை ஒவ்வொரு கட்டமாக உருவாக்கினார் கல்யாணசுந்தரம். கட்சிக்குள் தனக்கு வேலை செய்கிறவர்களை உருவாக்கினார்.

இது தொடர்பாக தொடர்ச்சியாக அவர்களுக்கு அறிவுறுத்தினோம். அவர் தனக்கு வேண்டியவர்களை வைத்துக் கொண்டு சீமானா? கல்யாணசுந்தரமா எனில் கல்யாணசுந்தரத்தைத் தலைவராக ஏற்பேன் என பதிவுகள் போட வைக்கிறார். இப்படி கட்சிக்கு கட்டுப்படாதவர்களை நீக்கினால் அவர்கள் எல்லோரையும் தனக்கானவர்களாக எடுத்துக் கொள்கிறார். அவர்களை வைத்துக் கொண்டு நாம் தமிழர் கட்சிக்கும் எனக்கும் எதிராக தொடர்ச்சியாக பதிவுகளை வெளியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சியே இப்பதான் வளர்ந்து கொண்டிருக்கிறது.. இதில் தன்னுடைய வளர்ச்சியை பொறுக்காமல் என்று சொல்வது எப்படி சரியாகும்?

கட்சி தொடர்பாக, என் மீதான விமர்சனங்களுக்கு கல்யாணசுந்தரம் எந்த பதிலும் மறுப்பும் தெரிவிக்கவில்லை. அதேபோல் சரியான ஆண்மகனாக இருந்தால் கல்யாணசுந்தரத்தை கட்சியை விட்டு நீக்கிப் பார்.. கட்சி இரண்டாகிவிடும் என எழுதவிடுகிறார். அதைப்பற்றியும் அவர் எந்த கருத்தும் சொல்லாமல் இருந்தார். இப்படி எழுதுவதை எல்லாம் ரசிக்கிறார்.. என்னை புறம்போக்கு என்று ஒருவர் எழுதினார். அது எனக்குப் பிடித்திருக்கிறது என்கிறார். இதை நீண்டகாலமாக செய்து வருகிறார்.. அவருக்கும் அறிவுறுத்தினோம். ஆனால் இதுபோன்ற நயவஞ்சகத்தை, சூழ்ச்சியை உலகத்திலேயே எங்கும் பார்த்ததே இல்லை. இத்தனை ஆண்டுகளில் இவ்வளவு காயம்பட்டது இல்லை.

எவ்வளவோ பேரை எதிர்த்து அரசியல் செய்திருக்கிறேன். சிறைபட்டிருக்கிறேன். துளிகூட கலங்கியது இல்லை. சொந்த பிள்ளை போல வளர்த்தால் தலைமை சரி இல்லை என்கிறார்கள். கோடி கோடியாக பணம் வந்தது என்கிறார்கள்? எங்கிருந்து பணம் வந்தது? வெளியில் இருந்து பேசுகிறவர்கள் பேசுவார்கள்.. நீங்கள் இப்படி பேசலாமா? வெளிப்படையாக சொன்னல் அவர்கள் என் சாவை எதிர்பார்க்கிறார்கள். நான் செத்த உடனே இந்த கட்சியை தனதாக்கிக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். இதற்கு ஒரு வட்டத்தை உருவாக்குகிறார்கள். என் தாயின் மீது, தமிழின் மீது, தலைவன் மீது ஆணையிட்டுச் சொல்கிறேன்… அவர்கள் (கல்யாணசுந்தரம், ராஜீவ்காந்தி) என் கட்சிக்கு துளியளவும் உண்மையாக இருந்தது இல்லை. அவர்கள் கட்சியில் இருந்தார்கள். அவர்களுக்காக அவர்கள் கட்சியில் இருந்தார்கள். இனியும் எனக்கோ என் கட்சிக்கோ அவர்கள் உண்மையாக இருக்கப் போவது இல்லை.

இதை உணர்ந்ததால்தான் நான் மவுனமாக கடந்து போகிறேன். நான் செத்தபிறகு அவர் கட்சியைக் கைப்பற்றி நடத்தட்டும். நான் செத்தாலும் கூட இவர்களை மட்டும் நம்பி நாம் தமிழர் பிள்ளைகள் பயணித்துவிடவே கூடாது. ஒரு மார்ல பாலை குடிச்சுட்டு இன்னொரு மாரை அறுக்கிற செயலை எப்படி சொல்வது? தோள்மீது ஏற்றி உங்களை அடையாளம் காட்டுகிறேன்.. இன்னார் தோள்மீது நிற்கிறேன் என்று சொல்லனும். ஆனால் என் வாயில் சிறுநீர் கழிக்க உங்களுக்கு எப்படி மனசு வந்தது? நாம் தமிழர் கட்சியை ரசிகர்மன்றம் போல் ஆக்கிட்டோம் என்று பேசுவதெல்லாம் பைத்தியக்காரத்தனம். அப்ப நீங்க இவ்வளவு காலம் மன்றத்தில்தான் இருந்தீங்களா? உங்களைப் புகழ்ந்து பேராசிரியர் தலைமையில் தமிழ்த் தேசியம் அமைப்போம் என உங்க அல்லைக்கள் எழுதும்போது இனிக்கிறது.. சீமானிசம் என்பது சீமானைப் பற்றி பேசவில்லை. சீமான் பேசியதை எடுத்துப் போடுகிறார்கள். தமிழ்த் தேசிய அரசியலைத்தான் சீமான் பேசுகிறான். அதை சீமானிசம் என போடுவதில் உங்களுக்கு என்ன பிரச்சனை?

நாம் தமிழர் கட்சியை உடைத்துவிட முடியும் என்பது பைத்தியக்காரத்தனம். மனதளவில் 4 ஆண்டுகளுக்கு முன்பே நான் தயாராகிவிட்டேன். ஏதோ நடக்கப் போகிறது என எனக்கு நெருக்கமான வட்டங்களில் சொன்னார்கள். நான் சரியாக வழிநடத்துவேன் என்று நம்பிக்கையாக இருப்பவர்கள் என்னுடன் இருக்கட்டும். வந்தால் வாழ்த்துகள்… போனால் வாழ்த்துகள். நாம் தமிழர் கட்சி கட்டுக்கோப்பாக இருக்கிறது. நான் தான் கட்சி.. நான் இல்லைன்னா கட்சி இல்லைன்னு எவன் நினைக்கிறானோ.. போடா..நீ இல்லாம கட்சியை நடத்த முடியும். எனக்கு எப்போதும் மனித வெறுப்பு இருந்ததே இல்லை.. இப்போதுதான் வெறுப்பு வருகிறது. நான் சர்வாதிகாரி.. மோசமானவன் என இவ்வளவு தூரம் விமர்சித்துவிட்டு வந்த பிறகு அவர்கள் தனியாக பயணிக்கட்டும்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *