சட்டமன்றத்தில் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர்.. ஸ்டாலின் பேச்சால் கண்கலங்கிய துரைமுருகன்..!

சட்டமன்றத்தில் ஸ்டாராக மட்டும் அல்லாமல் சூப்பர் ஸ்டாராக விளங்குபவர் துரைமுருகன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் உரையாற்றினார். இதைக் கேட்டு திமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள துரைமுருகன் கண்கலங்கினார். துரைமுருகன் என்றால் கனிவு. டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு. இந்தக் கனிவும் கண்டிப்பும் திமுக வளர்ச்சிக்குப் பயன்படட்டும். ஒன்றிணைந்து கழகப் பணி ஆற்றுவோம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை, செப்-9

திராவிட முன்னேற்றக் கழக பொதுக்குழுக் கூட்டம், இன்று (9.9.2020) சென்னை – அண்ணா அறிவாலயத்தில் மு.க. ஸ்டாலின் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது.

பொதுக்குழுவில் நிறைவாக, மு.க. ஸ்டாலின், திமுகவின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட துரைமுருகன் மற்றும் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட டி.ஆர்.பாலு, துணைப் பொதுச் செயலாளர்களாக நியமிக்கப்பட்ட முனைவர் க.பொன்முடி, ஆ.இராசா ஆகியோரையும் வாழ்த்தி உரையாற்றினார்.

அதில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் புதிய பொதுச் செயலாளராக துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். புதிய பொருளாளராக டி.ஆர்.பாலு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

ஒருமுறையல்ல; 7 முறை காட்பாடி தொகுதியிலும் – ராணிப்பேட்டை தொகுதியில் 2 முறையும் வென்றார். 9 முறை சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இன்றும் ‘சட்டமன்ற ஸ்டாராக’ – ‘சூப்பர் ஸ்டாராக’ச் செயல்படும், அண்ணன் அவர்களைப் போன்ற மற்றுமொரு சீனியர் நம் கட்சியிலும் இல்லை; வேறு கட்சிகளிலும் இல்லை! தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இல்லை! அத்தகைய பெருமைக்குரிய ஒருவரை திராவிட முன்னேற்றக் கழகம், பொதுச் செயலாளராகப் பெற்றுள்ளது.

சட்டமன்றத்தில் ‘இடி – மின்னல் – மழை’ என்று கலக்கியவர்களில், துரைமுருகன் மின்னல் என்று அழைக்கப்பட்டார். மின்னல் வான மண்டலத்தில் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் ஒளிவீச்சுதான்.

அந்த வகையில் பார்த்தால் துரைமுருகன், ஐம்பது ஆண்டுகளாக திமுகவில் ஒளிபாய்ச்சிக் கொண்டு இருப்பவர். அவர் இருக்கும் இடம் கலகலப்பாக இருக்கும். தானும் மகிழ்ச்சி அடைந்து, மற்றவர்களையும் மகிழ்விப்பவரே அனைவராலும் மதிக்கப்படுவார். அந்த வகையில் அனைவரது விருப்பத்துக்கும் உரியவராக துரைமுருகன் இருக்கிறார். தனிப்பட்ட முறையில் எனக்கு எல்லா வகையிலும் வழிகாட்டியாக இருக்கிறார்.

அதைப் போலவே அண்ணன் டி.ஆர்.பாலு திமுகவுக்குக் கிடைத்த ஆற்றல் மிக்க போர்வீரர்! மூவேந்தர்கள் ஆண்ட நாட்டை – ஒரு வேந்தர் ஆண்டால் எப்படி இருக்குமோ – அப்படி இன்றைக்கு நான்கு மாவட்டமாக இருக்கும் சென்னையை, அன்று ஒற்றை மனிதராகக் கட்டி ஆண்டவர் டி.ஆர்.பாலு. திராவிட முன்னேற்றக் கழகத்தில் 1957-ம் ஆண்டு 17 வயதில் இணைந்தவர், இன்றைக்குப் பொருளாளராக வளர்ந்து வந்துள்ளார்.

மூன்று முறை மத்திய அமைச்சராகப் பதவி வகித்துள்ளார். இப்படிப் பல்வேறு பொறுப்புகளை – கட்சியிலும் மத்திய அரசிலும் வகித்தவர் டி.ஆர்.பாலு. அவர் இன்றைக்கு திமுக பொருளாளராக உயர்ந்துள்ளார்.

துரைமுருகன் அவர்கள் 9 முறை சட்டமன்ற உறுப்பினர். டி.ஆர்.பாலு அவர்கள் 6 முறை மக்களவையிலும் ஒரு முறை மாநிலங்களவையிலும் உறுப்பினராக இருந்துள்ளார். துரைமுருகன் அவர்கள் 3 முறை மாநில அரசில் அமைச்சர். டி.ஆர்.பாலு அவர்கள் மூன்று முறை மத்திய அமைச்சர். இருவருமே ஓராண்டு காலம் மிசா சட்டத்தின் கீழ் சிறையில் இருந்தவர்கள். இத்தகையவர்களுக்கு மேலும் மகுடமாக இந்தப் பொறுப்புகள் கிடைத்துள்ளன. சிறப்புமிகு வரலாற்றுக் கடமை உங்கள் தோள் மீது விழுந்துள்ளது! உங்கள் மொத்த திறமையையும் கட்சிக்த் தாருங்கள், கழக வளர்ச்சிக்குப் பயன்படுத்துங்கள் என்று இலட்சக்கணக்கான தொண்டர்களின் சார்பில் நான் கேட்டுக் கொள்கிறேன்.

துரைமுருகன் என்றால் கனிவு. டி.ஆர்.பாலு என்றால் கண்டிப்பு. இந்தக் கனிவும் கண்டிப்பும் கட்சி வளர்ச்சிக்குப் பயன்படட்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்தின் அடிப்படையில், துணைப் பொதுச்செயலாளர்களாக பொன்முடி அவர்களும் ஆ.ராசா அவர்களும் இன்றைய தினம் நியமிக்கப்பட்டுள்ளார்கள். ஐந்து முறை சட்ட மன்ற உறுப்பினராக இருந்தவர் பொன்முடி. ஐந்து முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர் ஆ.ராசா. பொன்முடி, மூன்று முறை மாநில அமைச்சராக இருந்தவர். ஆ.ராசா, இரண்டு முறை மத்திய அமைச்சராக இருந்தவர். பொன்முடியாக இருந்தாலும், ஆ.ராசாவாக இருந்தாலும், தங்களது அறிவை, உழைப்பை, திறமையை, ஆற்றலை, முழுமையாக திமுக வளர்ச்சிக்கு எழுச்சிக்கு மேம்பாட்டுக்கு பயன்படுத்திப் பாடுபடுங்கள் என்று அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன் என்று ஸ்டாலின் கூறியுள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *