தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை..சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு..!!

தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகளை நடத்த தடை இல்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரம், ஆன்லைன் வகுப்பு நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை, செப்-9

கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாகப் பள்ளிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இருப்பினும், ஆன்லைன் வகுப்புகளால் மாணவர்களின் கண்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆபாச இணையதளங்களைக் காண நேரிடும் எனக்கூறி ஆன்லைன் வகுப்புகளுக்குத் தடை கோரி பலர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மத்திய அரசு, ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகளை வகுத்தது. அதன் அடிப்படையில், தமிழக அரசும் விதிகளை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் வகுப்பு வாரியாக மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் நடத்தும் நேரமும் அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வு, இன்று தீர்ப்பளித்தது. நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ‘ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை. ஆன்லைன் வகுப்புகளுக்கான நேரத்தை முறையாக பின்பற்ற வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க மாவட்ட தலைமையகத்தில் குழு அமைக்க வேண்டும். பெற்றோர் – ஆசிரியர் கலந்துரையாடல் இருக்க வேண்டும். ஆன்லைன் வழிகாட்டுதலை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் ,’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *