திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் போட்டியின்றி ஒருமனதாக தேர்வு.. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், திமுக பொருளாளராக டி.ஆர்.பாலுவும் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சென்னை, செப்-9

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வருகிறது. திமுகவின் ஒவ்வொரு பொதுக்குழுவும் பிரமாண்ட முறையில் நடப்பது வழக்கம். ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக முதல்முறையாக இந்த பொதுக்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடக்கிறது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள். அந்தந்த மாவட்டத்தில் உள்ள அணிகளின் மாநில அமைப்பாளர்கள் ஏன ஏறக்குறைய 3500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.

முதல் முறையாக காணொலி காட்சி மூலமாக நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் திமுக பொதுச்செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலும் ஒருமனதாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். திமுகவின் 4-வது பொதுச்செயலாளராக துரைமுருகனும், 8-வது பொருளாளராக டி.ஆர்.பாலும் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, இருவருக்கும் பொன்னாடை அணிவித்து மு.க.ஸ்டாலின் வாழ்த்துக்களையும் தெரிவித்தார். மேலும், திமுக தலைவருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் மீண்டும் பொதுச்செயலாளருக்கு வழங்க பொதுக்குழு கூட்டத்தில் திமுக உட்கட்சி விதி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து, திமுக துணைப் பொதுச்செயலாளராக ஆ.ராசா,பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். திமுக சட்டத்திட்ட விதி பிரிவு 17(3)ன் படி ஆ.ராசா,பொன்முடி ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. வர உள்ள சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக எடுக்க வேண்டிய வெற்றி வியூகங்கள் தொடர்பாக கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *