கிசான் திட்டத்தில் சுமார் 110 கோடி ரூபாய்க்கு முறைகேடு, 80 பேர் பணிநீக்கம் – ககன்தீப்சிங் பேடி விளக்கம்
சென்னை, செப்-8

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ககன்தீப்சிங் பேடி கூறியதாவது ;-
கிசான் திட்டத்தில் 3 தவணையாக ரூ.6,000 அளிக்கப்பட்டு வருகிறது. விவசாய நிலம் இல்லாதவர்கள் கிசான் திட்டத்தில் பயன்பெற முடியாது. கிசான் திட்டத்தில் குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். மார்ச் மாதம் வரை கிசான் திட்டத்தில் எந்த முறைகேடும் இல்லை. மார்ச் மாதத்திற்குப்பிறகு ஒரு சில பகுதிகளில் முறைகேடு நடைபெற்றுள்ளது. கிசான் திட்டத்தில் முறைகேடு ஜூன், ஜூலை மாதங்களில் முறைகேடு அதிகரித்தது. கிசான் திட்டத்தில் மார்ச் வரை 39 லட்சம் பேர் பயனாளிகளாக இருந்தனர். ஆகஸ்ட் மாதத்தில் திடீரென 6 லட்சம் பயனாளர்கள் சேர்க்கப்பட்டனர்.
திடீரென பயனாளிகளின் எண்ணிக்கை, குறிப்பாக 13 மாவட்டங்களில் அதிகரித்தது. கடலூர், விழுப்புரம், சேலம் மாவட்டங்களில் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரித்தது. கள்ளிக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்திலும் முறைகேடு நடந்தது. கொரோனா நிதி தருவதாக கூறி ஆதார் எண்ணை பெற்று மோசடி செய்துள்ளனர். அப்பாவி விவசாயிகளை ஏமாற்றி மோசடி நடைபெற்றுள்ளது. அப்பாவி விவசாயிகளின் தகவல் பெற்று தனியார் கணினி மையங்கள் ஏமாற்றியுள்ளன.
ஆகஸ்ட் தொடக்கத்தில் 10 குழுக்களை அனுப்பி விசாரணை நடத்தப்பட்டது. சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றக்கோரி முதலமைச்சருக்கு பரிந்துரை செய்தேன். கிசான் திட்ட முறைகேடு வழக்கு கடந்த 24-ம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. விசாரணையில் கணினி மையங்கள், இடைத்தரகர்கள் கூட்டாக செயல்பட்டு மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.
சிபிசிஐடி கை காட்டும் அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை அடிப்படையில் யார் முறைகேடு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். போலியான கணக்குகளில் செலுத்தப்பட்ட பணத்தை திரும்ப எடுக்கும் பணி நடந்து வருகிறது. போலி கணக்குகளில் இருந்து பணத்தை எடுக்கும் அதிகாரம் மாவட்ட ஆட்சியர்களுக்கு உள்ளது. போலி கணக்குகளில் இருந்து இதுவரை ரூ.32 கோடி திரும்ப பெறப்பட்டுள்ளது. போலி கணக்குளில் இதுவரை ரூ.110 கோடி முதல் ரூ120 கோடி வரை மோசடி நடத்திருக்கலாம். போலி கணக்குகளில் செலுத்தப்பட்ட பணம் இன்னும் 45 நாட்களில் முழுவதுமாக திரும்பப் பெறப்படும் என்றார்.
கிசான் திட்ட முறைகேடு வழக்கு தொடர்பாக இதுவரை 18-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேடு தொடர்பாக 34 அதிகாரிகள் இடைநீக்கம், 80 ஒப்பந்த பணியாளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.