பிடிக்காததை திணித்தால் பிறகெப்படி மலரும்?.. வானதி சீனிவாசனுக்கு உதயநிதி பதிலடி..!

பிடிக்காததை திணித்தால் தாமரை மலருமா? என்று பா.ஜ.க. பொதுச்செயலாளர் வானதி சீனிவாசனுக்கு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார்.

சென்னை, செப்-8

அண்மையில் ‘ஹிந்தி தெரியாது போடா’ என்ற ஹேஸ்டேக் உருவாக்கப்பட்டு டிரண்டிங் ஆனது. ஏற்கனவே இந்தி திணிப்புக்கு எதிராக தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து வரும் நிலையில் இதற்கு ஆதரவாக ஏராளமானோர் குரல் கொடுத்தனர். பாஜக பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் தி.மு.க.வுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ‘டீசர்ட் அணிந்தால் மட்டும் தமிழ் வளர்ந்து விடாது’ என்று கூறினார்.

இந்நிலையில், சென்னை ஜி.எஸ்.டி ஆணையர் அலுவலகத்தில் உதவி ஆணையராகப் பணியாற்றுபவர் பாலமுருகன். இவர் தன் மீது திணிக்கப்படும் இந்தி திணிப்பு குறித்து மத்திய மறைமுக வரி மற்றும் சுங்கவரி வாரிய தலைவருக்கு எழுதிய கடிதம் சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாகி உள்ளது. அந்தக் கடிதத்தில், “இந்தியை தாய் மொழியாக கொண்டவருக்கு இந்தி பிரிவில் பணியை ஒதுக்காமல் எனக்கு திட்டமிட்டு ஒதுக்கியுள்ளார்கள். விருப்பம் இல்லாத ஒருவரை இந்தியைப் பரப்ப வேண்டும் என்று நிர்பந்திப்பது இந்தி திணிப்பே” எனப் பாலமுருகன் பரபரப்பாக குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினும் இதுதொடர்பாக ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில், “டி-ஷர்ட் அணிந்தால் தமிழ் வளராது என்றனர். இந்தி எழுதப்படிக்க தெரியாத தமிழர் மூவரை இந்தி வளர்ச்சி பிரிவில் பணியமர்த்தினால் இந்தி வளருமா? கடிதத்தை படியுங்கள். ஒருபக்கம் நகைச்சுவை, மறுபக்கம் அவரை நினைத்து வேதனையாக உள்ளது. பிடிக்காததை திணித்தால் பிறகெப்படி (தாமரை) மலரும், மன்னிக்கவும் வளரும்!” என்று கிண்டலாக உதயநிதி ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *