ப.சிதம்பரத்தை கைது செய்தது அமலாக்கத்துறை

புதுடெல்லி, அக்டோபர்-16

ஐ.என்.எக்ஸ்., மீடியா மோசடி வழக்கில், சிபிஐ, அமைப்பை தொடர்ந்து, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் மீதும் குற்றம்சாட்டப்பட்டு சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறையும் தனித்தனியே வழக்குப் பதிவு செய்துள்ளன. இந்த வழக்கில், சிதம்பரத்தை, சி.பி.ஐ. அதிகாரிகள், ஆக. 21ல் கைது செய்தனர். தற்போது, நீதிமன்றக் காவலில், டெல்லியில் உள்ள திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய காவல், அக்.17-தேதியுடன் முடிகிறது. இந்த வழக்கில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, சிதம்பரத்தை கைது செய்து காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரி, அமலாக்கத் துறை, டில்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது.

இது தொடர்பாக உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம், நீதிமன்ற வளாகத்தில், சிதம்பரத்தை, 30 நிமிடங்கள் விசாரிக்கலாம்; அதன் பிறகு, காவலில் எடுக்க மனு தாக்கல் செய்யலாம். திஹார் சிறைக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து அவரை கைது செய்யலாம்’ என கூறியது. இதனையடுத்து திஹார் சிறைக்கு வந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் 3 பேர், சிதம்பரத்திடம் விசாரணை நடத்தினர். 2 மணி நேரம் விசாரணை முடிந்த நிலையில், சிதம்பரத்தை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். தொடர்ந்து, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மனு தாக்கல் செய்ய உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *