ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது காவல்துறையினர் பொய் வழக்குப்பதிவு ..ஐகோர்ட்டில் சிபிஐ தகவல்

சாத்தான்குளம் தந்தை-மகன் உயிரிழந்த விவகாரத்தில் ஜெயராஜ்-பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஐகோர்ட் கிளையில் சிபிஐ தெரிவித்துள்ளது.

மதுரை, செப்-8

சாத்தான்குளம் ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கில் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்கள் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் போலீஸ்காரர்கள் முருகன், முத்துராஜ், பிரான்சிஸ் ஆகியோர் தங்களுக்கு ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. இந்தநிலையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், தனக்கு ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளார்.

காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:-

சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது வரை சிறையில் இருக்கிறேன். ஐகோர்ட் கிளை உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்த நிலையில் தற்போது சிபிஐ காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எனக்கு ஜாமின் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டேன். நீதிமன்றம் வகுக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவேன் என்றும் உறுதி கூறுகிறேன். ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு இன்று நீதிபதி பாரதிதாசன் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில்,‘‘சம்பவம் நிகழ்ந்த அன்று கொரோனா பணியாக ஸ்ரீதர் வெளியே சென்றிருந்ததால், காவல் நிலையத்தில் இல்லை. ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டதற்கும், ஸ்ரீதருக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. சிபிஐ காவல் துறையினர் எவ்வித விசாரணையையும் மேற்கொள்ளாமல், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். அவருக்கு முதுகெலும்பு பிரச்சனை இருப்பதால், உடல் நலத்தைக் கருத்தில் கொண்டு ஜாமின் வழங்க வேண்டும்,’’என வாதிட்டார்.

சிபிஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்,‘‘இந்த வழக்கு தொடர்பாக 45 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் மீது பொய்யான வழக்குகள் பதியப்பட்டே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது ஜாமின் வழங்கினால் அவர் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது’’ என தெரிவிக்கப்பட்டது.

இவற்றை பதிவு செய்துகொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணை அதிகாரி, வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை குறிப்பை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் தீர்ப்பினை வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *