எல்லையில் துப்பாக்கிச்சூடு நடத்தவில்லை.. சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு

இந்திய – சீன கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள்தான் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர், இந்திய வீரர்கள் துப்பாக்கியால் சுடவில்லை என்று இந்திய ராணுவம் விளக்கம் அளித்துள்ளது.

டெல்லி, செப்-8

இந்தியா- சீனாவுக்கு இடையே சமீப காலமாக எல்லைப் பிரச்சினை அதிகரித்து வருகிறது. அண்மையில் லடாக் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறியதில் இருந்தே அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது. இரு நாட்டு ராணுவமும் எல்லையில் படைகளை குவித்துள்ளன.
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க இருநாட்டு அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து கொண்டே இருக்கின்றன. எனினும், பதற்றம் தணிந்தபாடில்லை. சீனா தொடர்ந்து அத்துமீறி வருவதால், பதற்றம் அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

இதற்கிடையில், லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியை தாண்டி வந்த இந்திய வீரர்கள் பாங்கோங் ஏரி சமவெளி பகுதிகளில், துப்பாக்கிச்சூடு நடத்தியதாக சீன ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கு விளக்கம் அளித்திருக்கும் இந்திய ராணுவம், இந்திய ராணுவ வீரர்கள் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதிக்குள் அத்துமீறி நுழையவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ இல்லை. நமது வீரர்கள் ஒரு போதும் கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியை கடந்து செல்லவில்லை. படைக்குறைப்பு மற்றும் பதற்றத்தை தணிக்கும் நடவடிக்கையில் தான் நாம் கவனம் செலுத்துகிறோம். ஆனால் அதற்கு எதிர்மாறாக சீன ராணுவம், படைகளை குவிப்பது, அத்துமீறி நுழைய முற்படுவது, பதற்றத்தை ஏற்படுத்தும் போன்ற செயல்களில் ஈடுபடுகிறது. செப்டம்பர் 7-ம் தேதி இரவு நமது பாதுகாப்பு முகாமுக்கு மிக நெருக்கமாக சீன ராணுவ வீரர்கள் வர முனைந்த காரணத்தால் பதற்றம் ஏற்பட்டது. அப்போது, ஒரு தரப்பு சீன ராணுவ வீரர்களே வானத்தை நோக்கி துப்பாக்கியால் சில சுற்றுகளை சுட்டனர். கட்டுப்பாட்டு எல்லைக் கோடு பகுதியில் சீன ராணுவ வீரர்கள், இந்திய வீரர்களின் கோபத்தைத் தூண்டும் வகையில் நடந்துகொண்டபோதிலும், நமது படைகள் மிகுந்த கட்டுப்பாட்டைக் கொண்டிருந்தன. முதிர்ச்சியான, பொறுப்பான முறையில் நடந்து கொண்டன. அமைதி மற்றும் அமைதியைப் பேணுவதற்கு நமது படைகள் கடமைப்பட்டுள்ளன. ஆனால் தேசிய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மையை பாதுகாக்க, எந்த தியாகத்தையும் செய்ய உறுதியாக இருக்கிறார்கள் என்றும் இந்திய ராணுவம் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *