அரியர் தேர்ச்சி விவகாரத்தில் தமிழக மாணவர்களை அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது.. டிடிவி தினகரன்

அண்ணா பல்கலைக்கழகம் மாணவர்கள் தேர்ச்சி விவகாரம், கல்லூரி மாணவர்கள் தேர்ச்சி விவகாரத்தில் அரசு தெளிவான முடிவு எடுக்காமல் பெற்றோர்களையும், மாணவர்களையும் ஏமாற்றுகிறது என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப்-8

கொரோனா தொற்று காரணமாக தமிழகத்தில் இதுவரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இதை அடுத்து பள்ளி மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. மேலும், உயர்கல்வி படிக்கும் இறுதியாண்டு தவிர்த்து அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. அரியர் வைத்திருக்கக்கூடிய முந்தைய ஆண்டுகளில் அனைத்து பொறியியல் மாணவர்களும் தேர்ச்சியடைய செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இந்நிலையில் பொறியியல் படிப்பு, பொறியியல் கல்லூரிகளுக்கு தலைமையாக கருதப்படுகின்ற ஏ.ஐ.சி.டி.ஐ. அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும், அதில் தமிழக அரசு எடுத்துள்ள அனைவரும் தேர்ச்சி என்ற முடிவை ஏற்க இயலாது என்று தெரிவித்திருந்ததாகவும் அண்ணா பல்கலைக்கழகம் கூறியிருந்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவின் கருத்தை ஏஐசிடிஇ கருத்தாக திணிப்பது கண்டனத்திற்குரியது என்றும், ஏஐசிடிஇ மின்னஞ்சல் வந்திருந்தால் அதை சூரப்பா வெளியிட வேண்டும் எனவும் கூறியிருந்தார். இந்த நிலையில் தமிழக அரசின் அரியர் தேர்வுகள் ரத்து அறிவிப்புக்கு எதிராக அண்ணா பல்கலைக்கழகத்திற்கு ஏஐசிடிஇ எழுதிய கடிதம் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்குவதை ஏற்க முடியாது என ஆக.30ந் தேதி ஏஐசிடிஇ அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

இந்த நிலையில் இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு:

“நீட் தேர்வில் நடந்து கொண்டதைப் போலவே அரியர் தேர்ச்சி விவகாரத்திலும் தமிழக மாணவர்களையும் பெற்றோர்களையும் பழனிசாமி அரசு நம்ப வைத்து ஏமாற்றி இருக்கிறது. அரியர் மாணவர்கள் தேர்ச்சி என்ற அறிவிப்புக்கு எதிராக அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) அனுப்பிய கடிதம் தற்போது வெளியாகி இருக்கிறது. அப்படி ஒரு கடிதமே தங்களுக்கு வரவில்லை என்று உயர்கல்வித்துறை அமைச்சர் சொன்னது எப்படி? கோடிக்கணக்கில் செலவழித்து பத்திரிக்கைகளில் விளம்பரங்களை கொடுத்தும், ஊரெங்கும் சுவரொட்டி அடித்தும் ஒட்டிக்கொண்டதில் காட்டிய அக்கறையில் துளியையாவது மாணவர்களின் மீது செலுத்தி அரியர் தேர்ச்சி விவகாரத்தில் உண்மை நிலை என்ன என்று தமிழக அரசு உடனடியாக விளக்கவேண்டும்”.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *