செப்டம்பர் 14-ம் தேதி முதல் 3 நாட்கள் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என அறிவிப்பு..!!

தமிழக சட்டசபையை 3 நாட்கள் நடத்துவதற்கு சபாநாயகர் தனபால் தலைமையில் கூடிய அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை, செப்-8

தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து விவாதிக்க அலுவல் ஆய்வு குழுக் கூட்டம், இன்று காலை நடைபெற்றது. கூட்டத் தொடரில் பங்கேற்கும் எம்எல்ஏக்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரிசோதனை செய்வது உள்பட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வுக் கூட்டத்தில், செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கி 15 மற்றும் 16 என 3 நாள்கள் தமிழக சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று காரணமாக, சட்டப் பேரவைக் கூட்டத் தொடா் நடைபெறும் இடம் கலைவாணா் அரங்கத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அங்குள்ள மூன்றாவது தளத்தில் பேரவைக் கூட்டத்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

அதன்படி, பேரவைக் கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்குகிறது. மறைந்த முன்னாள் குடியரசு தலைவா் பிரணாப் முகா்ஜி, எம்எல்ஏ ஜெ.அன்பழகன், எம்.பி. எச்.வசந்தகுமாா் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு பேரவை ஒத்திவைக்கப்படும். அதன்பின் செப்டம்பா் 15, 16-ஆம் தேதிகளில் கூட்டத் தொடா் நடைபெற உள்ளது.

அலுவல் ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேட்டியளித்த சபாநாயகர் தனபால், தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் வரும் 14,15,16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. 14-ம் தேதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மறைந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன், மறைந்த கன்னியாகுமரி எம்.பி. வசந்தகுமார் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். 16-ம் தேதி துணை நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. 16-ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் கேள்வி நேரம் உள்ளது. சமூக இடைவெளிவிட்டு பேரவை இருக்கைகள் அமைக்கப்படும். பேரவையில் பங்கேற்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், பாதுகாவலர்கள், பணியாளர்கள், பத்திகையாளர்கள் என அனைவருக்கும் கட்டாய கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்றார்.

கூட்டத்தொடரில், தேசிய கல்விக்கொள்கை, சுற்றுச்சூழல் மதிப்பீடு, கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்ப முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *