மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட பொது முடக்கம் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டிருக்கும் நிலையில் இன்று காலை மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

சென்னை, செப்-8

தமிழகத்தில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டு, மாவட்டங்களுக்குள் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. செப்டம்பர் 7 முதல் முழு அளவில் பேருந்து போக்குவரத்துக்கும், ரயில் போக்குவரத்துக்கும் அனுமதி வழங்கப்பட்டு புதிய பல தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மருத்துவக் குழுவினருடன் முதல்வர் பழனிசாமி இன்று மேற்கொண்டுள்ள ஆலோசனை முக்கியத்துவம் பெறுவதாக உள்ளது. புதிய தளர்வுகளால் கொரோனா தொற்று அதிகரிக்கும்பட்சத்தில் அதனை எவ்வாறு கையாள்வது, மருத்துவ வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்று கருதப்படுகிறது.
ஊரடங்கில் தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் அதற்கேற்ப மருத்துவ வசதிகளை அதிகரிப்பது குறித்தும் முதல்வர் ஆலோசிக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *