தியாகராய சாலையில் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம்.. அமைச்சர் S.P.வேலுமணி தகவல்
சென்னை தியாகராய சாலையில் ரூ.40.79 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் வருகின்ற அக்டோபர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது என நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை, செப்-8

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சிப் பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று (செப். 7) தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:
“தமிழ்நாடு முதல்வரின் உத்தரவின்படி கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பரிசோதனைகளை அதிகரித்தல், காய்ச்சல் சிறப்பு மருத்துவ முகாம்கள், வீடுகள் தோறும் சென்று வைரஸ் தொற்று அறிகுறி உள்ள நபர்களை கண்டறிதல், வைரஸ் தொற்று பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை தனிமைப்படுத்துதல் போன்ற பல்வேறு சிறப்பு நடவடிக்கைகளின் மூலம் வைரஸ் தொற்று சென்னையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேபோன்று பிற மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கரோனா வைரஸ் தொற்றை கண்டறிதல், காய்ச்சல் முகாம்கள் நடத்துதல், தனிமைப்படுத்தும் மையங்களை அமைத்தல், பல்வேறு விளம்பரப் பணிகளின் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை செயல்படுத்தி கரோனா வைரஸ் தொற்றை தமிழகத்தின் பிற பகுதிகளில் முற்றிலும் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சீர்மிகு நகர திட்டத்தின்கீழ் தியாகராயநகர், பாண்டி பஜார், தியாகராய சாலையில் 1,522 ச.மீ பரப்பளவில் ரூ.40.79 கோடி மதிப்பில் சுமார் 500 இருசக்கர வாகனங்கள் மற்றும் 200 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் முற்றிலும் தானியங்கி முறையில் அமைக்கப்பட்டு வரும் 2 கீழ்தளம், தரைதளம் மற்றும் 6 தளங்கள் கொண்ட பல அடுக்கு தானியங்கி வாகன நிறுத்தம் அக்டோபர் மாதம் இரண்டாவது வாரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்பட உள்ளது.
சென்னை நகருக்கு நீர் வழங்கும் நீர் தேக்கங்கள் 2019 ஆம் ஆண்டு முழுமையாக வறண்ட நிலையில் இருந்ததால், தமிழ்நாடு முதல்வர், ஆந்திர முதல்வரை, தெலுங்கு கங்கை திட்டத்திலிருந்து 8 டி.எம்.சி வழங்குமாறு ஆக. 7 அன்று கேட்டுக்கொண்டார். ஆந்திர முதல்வர் கண்டலேறு நீர் தேக்கத்திலிருந்து நீர் வழங்க ஒப்புதல் வழங்கியதன் பேரில் கண்டலேறு பூண்டி கால்வாய் மூலம் கடந்தாண்டு செப். 25 அன்று நீர் திறந்துவிடப்பட்டு செப். 28 அன்று பூண்டி நீர் தேக்கத்தை வந்தடைந்தது. செப். 28, 2019 முதல் ஜூன் 25, 2020 வரை 8.06 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர் பெறப்பட்டுள்ளது. மேலும் கூடுதலாக, 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரை செப். 14 முதல் வழங்கவும் ஆந்திர அரசு உறுதியளித்துள்ளது.
மேற்கண்ட நீராதாரங்களில் உள்ள நீர் கொள்ளளவைக் கணக்கில் கொண்டு கடந்த மே 7 முதல் சென்னைக்குக் குடிநீர் விநியோகம் நாளொன்றுக்கு 650 மில்லியன் லிட்டர் என்ற அளவிவிருந்து 700 மில்லியன் லிட்டராக உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது.
மேற்கண்ட நீராதாரங்கள் மற்றும் கிடைக்க பெறப்படவுள்ள 4 டி.எம்.சி கிருஷ்ணா நீரைக் கொண்டு, சென்னை மாநகரத்திற்கான குடிநீர் விநியோகம், தற்போது வழங்கப்பட்டு வரும் நாளொன்றுக்கு 700 மில்லியன் லிட்டர் என்ற அளவிலேயே, வருகின்ற 2021 ஆம் ஆண்டு மே மாதம் வரை எவ்வித தடையுமின்றி வழங்கப்படும்.
சென்னை மாநகரில் தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொரு மாதமும் சென்னைக் குடிநீர் வாரியத்தால் 145 கண்காணிப்பு கிணறுகள் மூலம் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் நிலத்தடி நீரின் தன்மை ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த 2020 ஆண்டின் தென்மேற்கு பருவமழை கடந்த ஜுன், ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நுங்கம்பாக்கத்தில் 172 மில்லி மீட்டர் மற்றும் மீனம்பாக்கத்த்தில் 409 மில்லி மீட்டர் என்ற அளவில் பெய்தது. இதன் காரணமாக, சென்னை மாநகரில் 2020 மே மாதத்தின் சராசரி நீர் மட்ட அளவானது தரைமட்டத்திற்குகீழ் 18 அடியாக இருந்தது.
இந்த சராசரி நீர்மட்ட அளவானது, தென்மேற்கு பருவமழைக்கு பின் (ஆகஸ்ட் மாதம்) சராசரியாக 17 அடி என்ற அளவில் உள்ளது. இந்த நிலத்தடி நீர் மட்ட அளவு சுமார் 1 அடி வரை உயர்ந்துள்ளது. மேலும், இந்த அளவானது கடந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது சராசரியாக 6 அடிவரை உயர்ந்துள்ளது.
சென்னைக் குடிநீர் வாரியம் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு சரிபார்க்கும் பணியை மேற்கொள்வதாலும் பொதுமக்களின் பங்களிப்பின் மூலமும், இந்த நிலத்தடிநீர் உயர்வு, எதிர்வரும் வடகிழக்கு பருவமழையின் வாயிலாக மேலும் உயரும்”
இவ்வாறு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.