நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க மத்திய அரசு முடிவு..!!

பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. மும்பையை மினி பாகிஸ்தான் என விமர்சித்தது சர்ச்சை ஆன நிலையில், ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மும்பை, செப்-7

நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் அவரது இல்லத்தில் கடந்த ஜூன் மாதம் 14ந்தேதி தற்கொலை செய்து கொண்டார். மன உளைச்சலால் தான் சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என நடிகை கங்கனா ரனாவத் குற்றம் சாட்டினார். மேலும் பாலிவுட்டில் போதை பொருட்களின் பயன்பாடு அதிகம் என்றும் குற்றம்சாட்டியிருந்தார். தொடர்ந்து, மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டு பேசினார். இதற்கு, மும்பை அல்லது மராட்டியத்தை யாராவது இழிவுபடுத்தவும், அவமதிக்கவும் முயன்றால் பொறுத்துக்கொள்ள மாட்டோம் என சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவுத் பதிலடி கொடுத்துள்ளார். வரும் 9ந்தேதி கங்கனா மும்பைக்கு விமானத்தில் வந்திறங்கினால் சிவசேனா பெண் உறுப்பினர்கள் கன்னத்தில் அறைந்திடுவார்கள் என்றும் கூறினார். மேலும் அச்சமாக இருந்தால் மும்பை மாநகரத்திற்கு வரவேண்டாம் என்றும், கங்கனா மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் சஞ்சய் ராவுத் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்திருக்கும் கங்கனா ரனாவத், சிவசேனா தொண்டர்கள் என்ன மிரட்டல் விடுத்தாலும், வரும் 9ம் தேதி மும்பைக்கு நிச்சயம் வரப் போவதாகவும் முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் சவால் விடுத்தார்.

இந்த நிலையில் நடிகை கங்கனா ரனாவத்திற்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்க உள்துறை அமைச்சகம் முடிவு எடுத்துள்ளது. இதனிடையே ஒய் பிரிவு பாதுகாப்பு என்பது நாள் ஒன்றுக்கு 11 பேர் கொண்ட வீரர்கள் 3 வேளை சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் இருப்பது ஆகும். மும்பை வரும் கங்கனாவுக்கு துணை ராணுவப் படை வீரர்கள் பாதுகாப்பு கொடுப்பார்கள். கங்கனாவின் இல்லத்துக்கும், கங்கனா வெளியே செல்லும் போதும் வீரர்கள் பாதுகாப்பு அளிப்பார்கள். சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.கங்கனா மும்பை செல்லும்போது அவருக்குப் பாதுகாப்பு வழங்கப்படும் என இமாசலப் பிரதேசத்தின் முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.

கங்கனாவுக்கு ஆதரவாகவும், சிவசேனாவுக்கு கண்டனம் தெரிவித்தும் சமூக வலைதளங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டன. இது மும்பை அரசியல் மற்றும் ஹிந்தி திரைப்பட உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *