ஜிடிபியின் வீழ்ச்சி அபாய எச்சரிக்கை.. ரகுராம் ராஜன்

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (ஜிடிபி) வீழ்ச்சி அனைவரையும் அச்சமூட்டும் வகையில் உள்ளதாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

டெல்லி, செப்-7

இதுபற்றி லிங்க்ட் இன் பக்கத்தில் ரகுராம் ராஜன் தெரிவித்திருப்பதாவது:

“சமீபத்தில் வெளியிடப்பட்ட 2020-21 நிதியாண்டின் முதல் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) அனைவரையும் அச்சமூட்டும் வகையில் உள்ளது. முறைசாரா துறையில் ஏற்பட்டுள்ள சேதங்களைக் கணக்கிட்டால், ஜிடிபி 23.9 சதவிகித வீழ்ச்சியைக் காட்டிலும் மோசமானதாக இருக்கும். கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளான அமெரிக்காவிலும், இத்தாலியிலும்கூட முறையே 9.5 சதவிகிதமும், 12.4 சதவிகிதமும்தான் வீழ்ச்சியடைந்துள்ளன.

தற்போதைய சூழலில் அரசினுடைய நிவாரணம் மிகவும் முக்கியமானது. எனினும், அரசு இதுவரை அளித்த உதவிகள் என்பது மிகவும் சொற்பமானது. முதன்மையாக ஏழைகளுக்கு இலவசமாக உணவு தானியங்கள் வழங்க வேண்டும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க வங்கிகளுக்கு கடன் உத்தரவாதம் அளிக்க வேண்டும். எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, நாட்டில் உள்ள வளங்களைக் கூடுதலாக செலவிட அரசு தற்போது தயக்கம் காட்டுகிறது. ஆனால், இந்த யுத்தி தன்னைத் தானே தோற்கடிப்பதாகும்.

அதனால் தற்காலிகமான அரைவேக்காடு சீர்திருத்தங்களான, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை ரத்து செய்தது போன்றவை சிறிய அளவுக்குத்தான் தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தைத் தரும். மோசமான செயலுக்கு சீர்திருத்தம் என பெயரிடப்பட்டது. சீர்திருத்தங்கள் என்பது பொருளாதார செயல்பாட்டை, வளர்ச்சியை தூண்டிவிட வேண்டும், உடனடியாக இல்லாவிட்டாலும்கூட, குறிப்பிட்ட காலத்துக்குப்பின், முதலீட்டாளர்களை தூண்டிவிட வேண்டும். கொரோனாவிலிருந்து உலகம் இந்தியாவுக்கு முன்பே சீரடைந்துவிடும். ஆதலால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த ஏற்றுமதியை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம் .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *