மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வை அதிகப்படுத்துங்கள்.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!!

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் குடிமராமத்து பணிகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக தெரிவித்த அவர், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய விழிப்புணர்வு பரப்புரையை அதிகப்படுத்த வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார்.

திருவள்ளூர், செப்-7

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனை தடுக்க மாவட்ட நிர்வாகங்களும் தமிழக அரசும் இணைந்து அதிரடி நடவடிக்கையை கையாண்டு வருகின்றன. இருப்பினும் ஒவ்வொரு மாவட்டமாக நேரில் சென்று, முதலமைச்சர் பழனிசாமி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முதலமைச்சர் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

திருவள்ளூர் மாவட்டம் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ரூ.14.94 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து அடிக்கல் நாட்டினார். மேலும், 7,528 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து, திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று பேசிய முதல்வர் பழனிசாமி, கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்கு ஒரே மருந்து விழிப்புணர்வு மட்டுமே என்றார். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. குடிமராமத்து பணிகள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்களில் அதிகளவு நீர் சேமிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையில் தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஊத்துக்கோட்டை கண்டலேறு பூண்டி கால்வாயில் சேதமடைந்த பல பகுதிகள் சீரமைக்கப்பட்டுள்ளன. நகரி ஆற்றின் குறுக்கே ரூ.18 கோடி மதிப்பீட்டில் தடுப்பணை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. அரசு சட்டக்கல்லூரி கட்டடம் ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளுக்கு பயிர்க் காப்பீட்டு தொகையாக ரூ.230.97 கோடி வழங்கப்பட்டுள்ளது என்று முதல்வர் கூறினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் தமிழக அமைச்சர்கள் பென்ஜமின், மாஃபா பாண்டியராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *