மழை நீரை சேகரித்து மீண்டும் மகத்தான சாதனை புரிவோம் – அமைச்சர் S.P. வேலுமணி அழைப்பு
சென்னை, செப்-7

தமிழகத்தில் நிலத்தடி நீர் வளத்தை பெருக்க பொதுமக்கள் தங்கள் குடியிருப்பு பகுதிகளில் மழை நீரை சேகரிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆண்டு வேண்டுகோள் விடுத்தார். குடிநீர் மற்றும் பாசன வசதியை மேம்படுத்த தமிழகம் முழுவதும் ஏரி குளங்களை தூர்வாருவதற்காக குடி மராமத்து பணிகளையும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். இதற்கு வலு சேர்க்கும் வகையில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், மழைநீர் சேகரிப்பை வலியுறுத்தி தனிப்பட்ட முறையில் பிரச்சாரம் தொடங்கினார். ஒவ்லாருவரும் அவரவர் வீடுகளில் ஒரு துளி மழை நீரையும் வீணாக்காமல் சேமிப்போம், நமக்காக,, நாட்டுக்காக நாளைக்காக என்று டிஜிட்டல் பிரச்சாரம் மூலம் பொதுமக்களை கேட்டுக் கொண்டார். அது மட்டுமில்லை உள்ளாட்சித் துறையின் கீழ் இயங்கும் அனைத்து அரசு கட்டிங்களிலும் மழை நீர் சேகரிக்கும் அமைப்புகளை உருவாக்க நடவடிக்கை எடுத்தார். இதன் பலனாக பெரும்பாலான வீடுகளிலும், அரசு கட்டிடங்களிலும் மழை நீர் சேகரிப்பு வசதி மேம்படுத்தப்பட்டது. இதன் காரணமாக இந்த ஆண்டு கோடை காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தன்னிறைவு நிலை உருவானது. தமிழகத்தில் தற்போது மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பொதுமக்கள் இந்த ஆண்டும் மழை நீரை சேமிக்க அக்கறை செலுத்த வேண்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் தமது ட்விட்டர் பக்கத்தில் “மாண்புமிகு தமிழக முதல்வரின் வரலாற்று சிறப்புமிக்க நீர் மேலாண்மை திட்டங்களுடன் பொது மக்களும் இணைந்து கடந்த ஆண்டு சிறந்த முறையில் மழைநீர் சேகரித்து, அதன் பலனை இந்த ஆண்டு அனுபவித்தோம். மழைநீரை சேமித்து வளமாக வாழ்வோம். மறுபடியும் இணைவோம், மகத்தான சாதனை புரிவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
