தமிழகத்தில் மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்கியது

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் ரயில் சேவை இன்று தொடங்கியது.

சென்னை, செப்-7

தமிழகத்தில் 13 சிறப்பு ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, இந்த ரயில்களின் சேவை இன்று (செப். 7) தொடங்கும் என்றும், டிக்கெட் முன்பதிவு செப்டம்பர் 5-ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய கடந்த சனிக்கிழமை அன்று, சென்னையில் இருந்து கோவை, மதுரை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, செங்கோட்டை உள்ளிட்ட ரயில்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து காத்திருப்போர் பட்டியல் காணப்பட்டது.

இந்த நிலையில் தமிழகத்தில் மீண்டும் பயணிகள் சிறப்பு ரயில் சேவை இன்று தொடங்கியது. ஜூன் மாதத்திற்கு பிறகு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இன்று காலை 6.10 மணி அளவில் கோவையை நோக்கி முதல் ரயில் இயங்கத் தொடங்கியது. முன்பதிவு செய்துள்ள பயணிகள் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். ரயில் நிலையங்களில் டிக்கெட்டுகள் கொடுக்கப்படுவதில்லை. தெர்மல் பரிசோதனை மூலமாக, பயணிகளின் உடல் வெப்பநிலை பரிசோதனை நடத்தி பின்னர் உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

மேலும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்து இருக்க வேண்டும். கொரோனா நோய்த்தொற்று உள்ள நபர்கள் ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படமாட்டார்கள். பயணிகள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நீண்ட நாள்களுக்குப் பிறகு தமிழகத்தில் சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட்டதால் பல்வேறு ரயில்நிலையங்களில் கூட்ட நெரிசல் காணப்பட்டது.

5 மாதங்களுக்கு பிறகு ரெயில் சேவை இன்று தொடங்கியதால் சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் பயண ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் ரெயில்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டுள்ளது.

ரெயில் நிலையத்துக்கு வரும் பயணிகள் ஒரே ஒரு நுழைவு வாயில் வழியாக உள்ளே வருவதற்கும், வெளியே செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள். சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் 6-வது நுழைவு வாயில் வழியாகவும், எழும்பூர் ரெயில் நிலையத்தில் மையப்பகுதியில் உள்ள நுழைவு வாயில் வழியாகவும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டு உள்ளே நுழைய அனுமதிக்கப்படுவார்கள்.

பயணிகளின் டிக்கெட்டுகளை ரெயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டிருக்கும் தானியங்கி டிக்கெட் பரிசோதனை அமைப்பு மூலம் பரிசோதிக்கப்படும். இதேபோல் உடல் வெப்ப பரிசோதனையும், கேமராவில் பொருத்தப்பட்ட தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதிக்கப்படும்.

இதேபோல் சென்டிரல் ரெயில் நிலையத்தில் 10 மற்றும் 11-வது நடைமேடைகள் ரெயில்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. எழும்பூர் ரெயில் நிலையத்தில் 4 மற்றும் 5-வது நடைமேடைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அனைத்து பயணிகளும் பரிசோதனைக்கு பிறகே ரெயிலில் ஏற அனுமதிக்கப்படுவார்கள்.

ரெயில் நிலையத்துக்கு 90 நிமிடங்களுக்கு (1½ மணி நேரம்) முன்னரே பயணிகள் வர வேண்டும் எனவும், அனைவரும் முக கவசம், சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் எனவும், ஏ.சி பெட்டிகளில் கம்பளி போர்வைகள் எதுவும் வழங்கப்படாது எனவும், பயணிகள் தவிர வேறு யாருக்கும் ரெயில் நிலையத்துக்குள் அனுமதி இல்லை எனவும் தெற்கு ரெயில்வே ஏற்கனவே தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *