கண்களை தானம் செய்வதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு..!!

நாளை தேசிய கண் தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

சென்னை, செப்-7

ஆண்டுதோறும் தேசிய கண்தான தினம் ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் செப்டம்பர் 8-ஆம் தேதி வரை அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் கண் தானத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மரணத்திற்கு பிறகு கண்களை தானம் செய்ய மக்களை ஊக்குவிக்கும் இந்த நிகழ்ச்சி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது போல் கண்களை தானம் செய்வதாக ஒருவர் உறுதி அளித்து எழுதி கொடுத்துவிட வேண்டும். பின்னர் அவர் இறந்த பிறகு, தகவலறிந்த சம்பந்தப்பட்ட அமைப்போ அரசோ அவரது கண்களை இறந்த குறிப்பிட்ட நேரத்திற்குள்ளாக தானமாக கொண்டு சென்று அதை பாதிக்கப்பட்டோருக்கு முன்னுரிமை அடிப்படையில் பொருத்தப்படும்.

இந்த நிலையில் நாளை தேசிய கண்தான தினத்தையொட்டி கண் தானம் செய்வதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கண் தானம் செய்வதற்கான படிவத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கையெழுத்திட்டார்.கண் தானத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது கண்களை தானம் செய்வதாக அறிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று (7.9.2020) தலைமைச் செயலகத்தில், மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் கண்தானம் செய்ய விரும்புவோர்களுக்கு உதவிடும் வகையில், தமிழ்நாடு மாநில நலவாழ்வு குழுமத்தால் உருவாக்கப்பட்ட www.hmis.tn.gov.in/eye-donor என்ற இணையதளத்தை துவக்கி வைத்தார்.

நமது நாட்டில் சுமார் 68 லட்சம் நபர்கள் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும், இளைஞர்களும் ஆவார்கள். தற்போது உள்ள மருத்துவ தொழில்நுட்ப முன்னேற்றத்தின் காரணமாக ஒரு நபரிடம் தானமாக பெறப்படும் இரு கண்கள், எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரு நபர்கள் கண்பார்வை பெற்று பயனடைவதுடன்,  கூடுதலாக கண்களின் பிற பாகங்களும் தேவைக்கேற்ப கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

பொதுவாக கண்தானம் செய்ய விரும்புவோர் யாரிடம் உறுதிமொழி கொடுப்பது, இறந்தபிறகு எவ்வாறு, எங்கு, எப்படி கண்களை தானமாக கொடுப்பது என்ற விவரங்கள் குறித்து தெளிவில்லாமல் இருப்பதால், அது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் www.hmis.tn.gov.in/eye-donor என்ற இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இணையதளம் மூலம், கண்தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயர், இருப்பிட முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதிமொழியினை ஏற்ற பின்பு, அதற்கான சான்றிதழை நேரடியாக இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சான்றிதழை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும்  பெற்றுக் கொள்ளலாம். இப்பதிவின் மூலம், கொடையாளர்களிடமிருந்து மருத்துவக் குழுவினரால் பெறப்படும் கண்கள், உரிய காலத்தில் கண் வங்கியில் சேர்த்திட மிகவும் உதவியாக இருக்கும்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.எடப்பாடி மு. பழனிசாமி அவர்கள் இன்று தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் திரு.க.சண்முகம்,  மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *