தொடங்கியது வடகிழக்கு பருவமழை!!!

சென்னை, அக்டோபர்-16

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கிவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை நுங்கம்பாக்கத்தில் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், தென் இந்திய பகுதிகளில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்றே துவங்கியுள்ளது. அடுத்த 2 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.

அடுத்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது. மேலும், கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் மீனவர்கள் குமரி கடல் பகுதிக்கு செல்லவேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அநேக இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பூந்தமல்லியில் 11 செ.மீ.மழையும், பாம்பனில் 10 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *