கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள்… அமைச்சர் S.P. வேலுமணி
கோவை, செப்-6

கொரோனா தொற்றில் இருந்து பாதுகாக்க முகக்கவசம் அணிவது, சமூகவிலகலை கடைபிடிப்பது, அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவுவது போன்ற அவசியமான வழிமுறைகளை மக்கள் கடைபிடித்தாலும், நோய் தொற்றை தடுக்க அத்தியாவசியமான நோய்எதிர்ப்பு சக்திமிக்க பாரம்பரிய உணவுகளை உட்கொள்ள மக்கள் தங்களை தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்று தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த. நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் பாரம்பரிய உணவு கலாச்சாரத்திற்க்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிஜிட்டல் பிரச்சாரம் தொடங்கியுள்ளார்.
இந்த நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை கண்காணிக்க மண்டல வாரியாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர், சிகிச்சைக்கு அழைத்து செல்லப்படுகிறார்களா, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் வீட்டு தனிமையில் உள்ளனரா? போன்ற முக்கிய தகவல்களை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மண்டலம் வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுவினர் தினமும் மாலை 5:00 மணிக்குள் கட்டுப்பாட்டு மையத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா 500 படுக்கைகளுடன் கூடிய சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன,” எனத் தெரிவித்துள்ளார்