ஹிந்தி_தெரியாது_போடா… ட்விட்டரை தெறிக்கவிடும் தமிழர்கள்..!!
#ஹிந்திதெரியாது போடா என்ற ஹேஷ்டேக் படு வைரலாகி வருகிறது.
சென்னை, செப்-6

இயக்குனர் வெற்றிமாறன் தனக்கு இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலைய ஊழியர்கள் தன்னை மோசமாக நடத்தியதாக பேட்டி ஒன்றில் குறிப்பிட்டு இருந்தார். டெல்லி விமான நிலையத்தில் தமிழர் என்று தன்னை அதிகாரிகள் இகழ்ந்து பேசியதாக வெற்றிமாறன் கூறியுள்ளார். இதுதான் சினிமா துறையினரை இந்திக்கு எதிராக கொதிக்க வைத்துள்ளது. இயக்குனர் வெற்றிமாறனுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சினிமா துறையினர் உட்பட ஏராளமானோர் #ஹிந்திதெரியாதுபோடா என்ற ஹேஷ்டேக்கை இன்று காலை முதலே டிரெண்டாக்கி வருகின்றனர்.
இந்திய அளவில் டிரெண்டாகி வரும் இந்த ஹேஷ்டேக்கில், பலரும் தங்கள் கருத்தையும், விமர்சனங்களையும் முன்வைத்தவண்ணம் உள்ளனர். மீம்ஸ்களையும், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் தொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்துவருகின்றனர்.
திரை உலகில் பலர் இந்திக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, நடிகர் சாந்தனு ஆகியோர் இந்த டிரெண்டில் இறங்கி உள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா, டி- சர்ட் ஒன்றை அணிந்துள்ளார். அதில் திருவள்ளுவர் படத்துடன், நான் தமிழ் பேசும் இந்தியன் என்று அச்சிடப்பட்டிருந்தது. யுவனுடன் நடிகர் ஸ்ரீரீஷ் இருக்கிறார். இவர் சிவப்பு நிற டீ சர்ட் அணிந்துள்ளார். இதில் இந்தி தெரியாது போடா என்று எழுதப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து நடிகர் சாந்தனுவும் அவரின் மனைவியும் இதே ஜோடி டி- சர்ட்களை அணிந்து புகைப்படம் எடுத்து பகிர்ந்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனது தம்பியுடன் இந்தி தெரியாது போடா என்ற டி சர்ட்டை அணிந்து கொண்டு, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷும் தனது ஆதரவை இந்த விவகாரத்தில் கொடுத்துள்ளார்.

#ஹிந்திதெரியாது போடா என்ற டிரெண்ட், தற்போது தேசிய அளவில் வைரலாகி உள்ளது.
