பொதுமக்கள் யார் வேண்டுமானாலும் இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம்..ஐசிஎம்ஆர்

மருத்துவரின் பரிந்துரை இல்லாமலே இனி கொரோனா பரிசோதனை செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டெல்லி, செப்-5

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,36,747-ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 69,561-ஆக உயர்ந்துள்ளது.

தற்போதுவரை, கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு மருத்துவர்களின் பரிந்துரையின் பேரிலேயே கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இனி, கொரோனா பரிசோதனை செய்து கொள்ள விரும்புவோர் யார் வேண்டுமானாலும் பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கும்படி ஐசிஎம்ஆர் வழிகாட்டுதல் நெறிமுறையில் மாற்றத்தை மேற்கொண்டுள்ளது.

அந்த புதிய வழிகாட்டு நெறிமுறையில், நாட்டை விட்டு நாடு செல்லுதல் அல்லது மாநிலங்களில் இருந்து மற்றொரு மாநிலத்துக்குச் செல்வோர், அதன் நுழைவு வாயிலில், கொரோனா தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழ் அளிப்பதை கட்டாயமாக்கலாம் என்று தேசிய கொரோனா பேரிடர் குழு வலியுறுத்துகிறது. அதே வேளையில், பொதுமக்களில், கொரோனா பரிசோதனை செய்து கொள்ள யார் விரும்பினாலும், தேவைப்பட்டாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட வேண்டும்.

பொதுவாக தனியார் மருத்துவமனைகளில் யார் வேண்டுமானாலும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டாலும், பொதுவாக கொரோனா அறிகுறி இருப்பவர்கள் தான் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள பரிந்துரைக்கப்படுகிறார்கள். மேலும், பிரசவங்கள் போன்ற அவசரகால சிகிச்சைகள் எதுவும் கொரோனா பரிசோதனைக்காக தாமதப்படுத்தக் கூடாது என்பதும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் அபாயம் இருக்கும் நபர்கள், அறிகுறி இல்லாமல் இருந்தாலும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இதர நோய்கள் இருப்பவர்களாக இருப்பின் அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *