பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காவிட்டால் ரூ.500 அபராதம்… தமிழக அரசு அதிரடி

சென்னை, செப்-4

பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டமாக கூடினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவை பரப்பும் வகையில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தனிமைப்படுத்துதல் விதிகளை மீறுவோருக்கு ரூ.500, முகக்கவசம் அணியாதோருக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும். கொரோனா விதிகளை மீறுவோருக்கு பொது சுகாதார திருத்தச்சட்டத்தின் படி அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சலூன், ஸ்பா, உடற்பயிற்சி கூடம், நிறுவனங்கள் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் விதிகளை மீறுவோருக்கு ரூ.500, வாகனங்கள், நிறுவனங்களுக்கு ரூ.5000 அபராதம் விதிக்கப்பட உள்ளது.

தற்போது ஊரடங்கிலிருந்து பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பணி நிமித்தம் காரணமாக அதிக அளவில் வெளியே வருகின்றனர். எனவே பொதுமக்கள் வெளியே வரும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். பொது இடங்களில் குறைந்தது 2 மீட்டர் இடைவெளி விட்டு தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் அபராதமும், தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்காத வணிக நிறுவனங்கள் மற்றும் அங்காடிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு மூடி சீல் வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் பொது சுகாதார சட்டத் திருத்தத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று ஒப்புதல் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *