திருப்பதி ஏழுமலையான் கோவில் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல்

திருப்பதி ஏழுமலையான் கோவில் கணக்கு மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்வதற்கு தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது.

ஐதராபாத், செப்-3

ஆந்திர முன்னாள் முதல்வர் என்டி ராமராவ் காலத்தில் இருந்து தற்போது வரை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சொந்தமான சொத்துக்கள், நகைகள் மற்றும் பணப்பரிமாற்றம் குறித்து தணிக்கை செய்ய வேண்டும் என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சுவாமி ஒரு ட்வீட் செய்திருந்தார். இதனையடுத்து கடந்த 5 ஆண்டு கால திருப்பதி கோவில் கணக்கு மற்றும் எதிர்கால கணக்குகளை தலைமை கணக்கு தணிக்கையாளர் தணிக்கை செய்ய உத்தரவிடக்கோரி ஆந்திர உயர் நீதிமன்றத்தில் சுப்பிரமணியன் சுவாமி பொதுநல வழக்கு தொடர்ந்தார். கோவிலுக்கு சொந்தமான நகைகள், சொத்துக்கள் மற்றும் வரவு -செலவு கணக்கை அவர் கேட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான மக்கள் சமூக வலைத்தளங்கள் வாயிலாக இந்த கோரிக்கையை முன்வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து கடந்த 5 ஆண்டு கால திருப்பதி கோவில் கணக்குகள் மற்றும் சொத்துக்களை தணிக்கை செய்ய தேவஸ்தானம் ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சமீபத்தில் நடந்த தேவஸ்தான வாரிய கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 2014 முதல் 2020 வரையிலான கணக்குகளை சிறப்பு தணிக்கை செய்து 6 மாதங்களில் அறிக்கை வழங்கும்படி தலைமை கணக்கு தணிக்கையாளரை கேட்டுக்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இதன் மூலம், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்களை ஆந்திர அரசு, மத்திய தலைமை கணக்கு தணிக்கையாளரிடம் வழங்க உள்ளது. திருப்பதி திருமலை தேவஸ்தானம் இது குறித்து நிறைவேற்றிய 202 பக்கங்கள் கொண்ட தீர்மானம் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *