காஷ்மீர் விவகாரத்தில் உலக நாடுகள் ஆதரவு : மோடி அரசின் சாதனை என்கிறார் அமித்ஷா டெல்லி.அக்டோபர்.15

காஷ்மீர் விவகாரத்தில், இந்திய நிலைப்பாட்டிற்கு உலக நாடுகள் ஆதரவு தெரிவித்திருப்பது பிரதமர் நரேந்திர மோடி அரசின் சாதனை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

 இது தொடர்பாக ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில்,
காஷ்மீரில் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பின்னர், தற்போது எந்த கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. கண்ட உடன் துப்பாக்கியால் சுடவும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. 6  காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே 144 தடை  ஆணை நடைமுறையில் உள்ளது. காய்கறி சந்தைகள் சுமூகமாக செயல்படுகின்றன. ஆப்பிள் வர்த்தகம்  வழக்கம் போல் நடைபெறுகிறது. சாலைகளில் அமைதியாக  போக்குவரத்து நடைபெறுகிறது. பொது மக்கள் வெள்ளிக்கிழமை வழிபாட்டுக்கு சென்று வருகின்றனர். மொத்தத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பிராந்தியங்களில் அமைதி நிலவுகிறது. செல்பேசி சேவை மீண்டும் துவங்கியுள்ளது.

4 ஆயிரம் பேர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது, ஆயிரம் பேர் மட்டுமே சிறையில்உள்ளனர். அதில் 800 பேர் கல் எறியும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள். காஷ்மீர் சிறப்பு சட்டம் அமலில் இருந்த போது ஷேக் அப்துல்லா 11 ஆண்டுகள் சிறையில் இருந்தது ஏன்? இதற்கு காங்கிரஸ் பதில் கூறாது. அக்கட்சிதான் அப்போது அதிகாரத்தில் இருந்தது. மெகபூபா மற்றும் ஒமர் அப்துல்லாவும் பொது மக்கள் பாதுகாப்பு சட்டத்தில் தான் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தான், அவர்கள் வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.


சிறப்பு சட்டம் அமலில் இருந்த போது, காஷ்மீரில் வளர்ச்சி இல்லை. ஊழல் அதிகரித்தது. இனிமேல் வளர்ச்சி ஏற்படும். உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. 370 ரத்துக்கு பின்னர், ஒரு துப்பாக்கி குண்டு கூட சுடப்படவில்லை.
சட்டம் ஒழுங்கு மோசம் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் துருக்கி, சீனா, மலேசியா போன்றவை, பாகிஸ்தானை ஆதரிப்பது அவர்களின் விருப்பம். ஆனால், பெரும்பாலான உலக நாடுகள் இந்தியாவை ஆதரிக்கின்றன. இது பிரதமர் மோடி அரசின் சாதனை என்று அமித்ஷா  கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *