வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது..உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டம்..!

வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

டெல்லி, செப்-3

கொரோனா ஊரடங்கு காலத்தில் வங்கிகளில் பெறப்பட்ட தனிநபர் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், கடன் அட்டை மீதான கடன் உள்ளிட்ட அனைத்துத் தவணைகளையும் செலுத்துவதில் இருந்து கால அவகாசம் அளிக்கப்பட்டது. இருப்பினும் கடனுக்கான வட்டியைச் சேர்த்து வசூலிக்கும்போது செலுத்த வேண்டிய தவணைக் காலம் அதிகரிப்பதோடு, கடன், வட்டி சுமை அதிகரிக்கும். இதைப் பல்வேறு தரப்பினரும் சுட்டிக் காட்டினர். சலுகை என்றால் குறைந்தபட்சம் இந்தக் காலகட்டத்துக்கான வட்டியை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஊரடங்கில் செலுத்தாத தவணையின் வட்டி மீது கூடுதல் வட்டி வசூலிப்பதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதில் வங்கிக் கடனுக்கான வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. பொருளாதாரத்தை வலுவிழக்கும் வகையில் முடிவெடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எல்லா துறைகளும் பாதிக்கப்பட்டாலும் ஒவ்வொரு துறையின் பாதிப்பும் வெவ்வேறாக உள்ளது. ஆகஸ்ட் 31ம் தேதி வரை ஈஎம்ஐ கட்டாதோர் கணக்குகள் கடனை திருப்பி செலுத்தாதவர்கள் பட்டியலில் சேர்க்கப்படாது என மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டது.

இதனையடுத்து, வட்டிக்கு வட்டி விவகாரத்தில் மத்திய அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்றும், எல்லா துறையும் பாதிக்கப்பட்டுள்ளது என்றால், அதுகுறித்து என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், பேரிடர் மேலாண்மை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருந்தும் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *