துருக்கி மீது பொருளாதார தடை விதித்து அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

வாஷிங்டன். அக்டோபர்.15

சிரியாவின் மீது தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் துருக்கி  நாட்டின் மீது  அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

சிரியாவின் வடக்குப் பகுதியில் அமெரிக்கப் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில்,அங்கு குர்தீஷ் படையினர் மீது துருக்கி தாக்குதல் தொடுத்துள்ளது. இதனையடுத்து தாக்குதல் நடைபெற்ற முகாமில் இருந்த ஐஎஸ் இயக்கத்தைச் சேர்ந்த 800க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் தப்பிச் சென்று விட்டதாக குர்தீஷ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், துருக்கியின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாடு மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்துள்ளது.

இது குறித்து டிரம்ப் வெளியிட்ட அறிக்கையில், துருக்கி தலைவர்கள் தொடர்ந்து அழிவு மற்றும் ஆபத்தான வழியை தேர்வு செய்தால், அந்நாட்டின் பொருளாதாரத்தை அழிக்க முழுமையாக தயாராக உள்ளேன். அமெரிக்கா – துருக்கி இடையே நடக்கும், 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட வர்த்தக பேச்சுவார்த்தையை நிறுத்தி வைத்துள்ளேன். தொடர் மனித உரிமை மீறலில் ஈடுபடுபவர்கள், அமைதி ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்துபவர்கள் மீது கூடுதல் தடை விதிக்கப்படுகிறது எனக்கூறியுள்ளார். துருக்கி மீது தடை விதிக்கப்படுவது குறித்து அமெரிக்க பிரதிநிதித்துவ சபை தலைவர் நான்சி பெலோசிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், துருக்கி விவகாரம், தேசிய அவசர நிலை என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *