வி.கே.சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துகள் முடக்கம்.. நோட்டீஸ் ஒட்டிய வருமான வரித்துறை

வி.கே.சசிகலா பினாமி பெயர்களில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வாங்கி குவித்த ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை முடக்கியது தொடர்பாக வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது.

சென்னை, செப்-2

சொத்து குவிப்பு வழக்கில், சசிகலா சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். இதைத் தொடர்ந்து, போயஸ் கார்டன் வீடு, சசிகலாவுக்கு சொந்தமான இடம் என பல இடங்களில் 2017 நவம்பர் 9ம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் 187 இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். கணக்கில் வராத பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்துகள், வங்கி கணக்குகள், வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வாங்கி குவிக்கப்பட்ட அசையா சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் ரூ.4,500 கோடிக்கு சொத்துகள் கண்டறியப்பட்டது.

இந்நிலையில் சகிகலா 2003-2005ம் ஆண்டுகளில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பினாமிகள் பெயர்களில் பல கோடிகளில் சொத்துகள் வாங்கி குவித்து இருந்தது உறுதியானது. ஆலந்தூர், தாம்பரம், கூடுவாஞ்சேரி, ஸ்ரீபெரும்பத்தூர், போயஸ் கார்டனில் 24 ஆயிரம் சதுரடியில் உள்ள பங்களா என ரூ.300 கோடி மதிப்பில் 65 சொத்துகள் 200 ஏக்கரில் பினாமிகளின் பெயரிகளில் வாங்கி குவித்திருப்பது தெரியவந்தது. சசிகலாவின் பினாமி நிறுவனமான ஹரிசந்தனா எஸ்டேட் பிரைவேட் லிமிடட் ஐதராபாத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. கலியபெருமாள் மற்றும் சிவக்குமார் பெயர்களில் இயங்கி வருவதாக கூறப்படுகிறது. இவர்கள் சசிகலாவின் பினாமி என்பதும், இந்த நிறுவனம் பதிவு செய்யப்பட்டதிலிருந்து இதன் பெயரில் எந்த வருமானமும் இல்லை என்று கூறப்படுகிறது.

பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ், சசிகலா பினாமி பெயர்களில் வாங்கி குவித்துள்ள ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகளை வருமான வரித்துறை தற்போது முடக்கியது. மேலும் சொத்து முடக்கியது தொடர்பாக கர்நாடக சிறையில் உள்ள சசிகலாவுக்கும் வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை நோட்டீஸ் ஒட்டியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *